திருச்சியில் திருக்குறள் ஓவியம் மற்றும் புகைப்பட கண்காட்சி

திருச்சியில் திருக்குறள் ஓவியம் மற்றும் புகைப்பட கண்காட்சி

கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து கொண்டாடப்பட உள்ள வெள்ளிவிழாவையொட்டி திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் திறந்து வைத்து, பார்வையிட்டு குறளுக்கு ஓவியம் வரைந்தவர்களிடம் அது குறித்து கேட்டறிந்து பாராட்டினார்.

முக்கடல் சங்கிமிக்கும் கன்னியாகுமரியில் முத்தமிழறிஞர் கலைஞர் 2000 ஆம் ஆண்டு 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவிய வெள்ளி விழாவினை முன்னிட்டு திருக்குறளைப் பரப்பும் வகையில் புகைப்படக் கண்காட்சி, கருத்தரங்கம், பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி-வினா ஆகிய நிகழ்ச்சிகளை டிசம்பர் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட தமிழ்நாடு அரசு ஆணைப்பிறப்பித்துள்ளது. 

அதன்படி திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டத்துடன் இணைந்து 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், முதல் நிகழ்வாக இன்று திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் அய்யன் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் சம்பந்தப்பட்ட ஓவியம் மற்றும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார். 

இக்கண்காட்சியில் திருக்குறள் கருத்துக்களை பிரதிபலிக்கும் வண்ணம் திருச்சி டிசைன் ஸ்கூல் மாணவர்கள், ஓவியர் கலைச்செல்வன், ஓவியர் ரவிலெக்ஸ் ஆகியோர் வரைந்திட்ட பல்வேறு கண்கவர் வண்ண திருக்குறள் தொடர்பான ஓவியங்களும், புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அகழ் அமைப்பு நிறுவனர் தமிழ்ச்செம்மல் விநோதினி திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கு 133 கதாசிரியர்களைக் கொண்டு எழுதப்பட்ட 1330 சிறுகதைத் தொகுப்புகள் அடங்கிய 7 அடி உயர திருக்குறள் தொகுப்பு நூல் சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.

திருக்குறள் சம்மந்தப்பட்ட பல்வேறு நூல்கள், திருக்குறளுக்கு தமிழறிஞர்கள் பலர் எழுதியுள்ள உரை நூல்கள், வழி நூல்கள், திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இக்கண்காட்சி மாவட்ட மைய நூலத்தில் (31.12.2024) ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, வினாடிவினா போட்டி ஆகியவற்றில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

இந்நிகழ்வில், உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குப்தா, மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், கவிஞர் நந்தலாலா, வாசகர் வட்டத்தலைவர் கோவிந்தசாமி உள்ளிட்ட தமிழறிஞர்கள், திருக்குறள் ஆர்வலர்கள், வாசகர் வட்ட நிர்வாகிகள், போட்டித்தேர்விற்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் வாசகர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision