திருச்சி திரையரங்குகள் - அடையாளமாகும் சென்ட்ரல் டாக்கீஸ்
மக்களின் பொழுதுபோக்கு என்றாலே திரைப்படங்கள் என்றாகிவிட்டது திரைப்படங்களையும் மக்களையும் பிரிக்க முடியாத ஒன்றாகும். ஆகையால் திரையரங்குகள் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய பங்கை வகிக்கின்றன. திருச்சியின் பழமையான திரையரங்கம் பற்றிய தகவல்களையும் தொடர்ந்து கட்டுரையில் காண்போம்.
திருச்சி காந்தி மார்க்கெட் உப்புப்பாறை பகுதியில் ஓகோவென ஓடிவந்த சென்ட்ரல் டாக்கீசுக்கும், அதன் உரிமையாளருக்கும் ஒரு வரலாறு உண்டு. திருச்சி என்று சுருக்கமாக இன்று அழைக்கப்படும் திருச்சிராப்பள்ளி மாநகரின் மத்தியில், சுதந்திரத்திற்கு முன்பு ஒரு வாரச்சந்தை இயங்கி வந்தது. அங்கு நிரந்தர மார்க்கெட் ஒன்றை கட்டுவதற்கு அன்றைய நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அப்போது தமிழகப் பயணமாக மகாத்மா காந்தியடிகள் திருச்சி வந்திருந்தார். அவரை வைத்து மார்க்கெட்டிற்கு 1927-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி நகராட்சி நிர்வாகம் அடிக்கல் நாட்டியது. இதனால் அது காந்திமார்க்கெட் என அழைக்கப்பட்டது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர் வேலை நிமித்தமாக வருவதும், போவதுமாக இருந்ததுடன் பலர் அங்கே தங்கியிருந்து வேலைசெய்தும் வந்தார்கள். இந்தத் தொழிலாளர்களை மனதிற்கொண்டு காந்திமார்க்கெட் உப்புப்பாறை பகுதியில் ஒரு திரையரங்கம் கட்டப்பட்டது.
திருச்சி அரியமங்கலம் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வந்த தொழிலதிபர், ஏ.எம்.சாகுல் அமீது அந்தத் திரையரங்கைக் கட்டினார். சுமார் 22 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட அந்தத் திரையரங்கம் பெங்களூருவில் இருந்த அலங்கார் தியேட்டர் போன்று தூண்கள் இல்லாத வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டது. இருக்கைகள், உபகரணங்கள் இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அப்போதே 2 விதமான மின்சார ஒயரிங் அங்கு செய்யப்பட்டு இருந்தது. ஒன்று பழுதாகிவிட்டால்கூட தடையில்லாமல் திரையரங்கம் இயங்க இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடு.
தியேட்டருக்கு, சென்ட்ரல் டாக்கீஸ் என்று பெயரிடப்பட்டது. நகரின் மையப் பகுதியில் அமையப்பெற்றதால் அதற்கு பெயரும் பொருத்தமாக இருந்தது. 1947-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி சென்ட்ரல் டாக்கீஸ் திறக்கப்பட்டது. தியேட்டரின் வெள்ளிப்பூட்டை, வெள்ளிச் சாவி கொண்டு திறந்ததாக இன்னமும் பெருமையாகச் சொல்கிறார்கள். எம்.ஜி.ஆர். நடித்த பைத்தியக்காரன் படம்தான் இங்கு முதலாவதாக திரையிடப்பட்டது.
எம்.ஜி.ஆர். படங்கள் திரையிடப்பட்டால் சாமானியமாக டிக்கெட் கிடைக்காதாம். டிக்கெட் கவுன்ட்டரில் வரிசையில் நிற்பவர்கள் ஒருவர் தோள்மீது ஒருவர் காலூன்றி ஏறிச்சென்றும் டிக்கெட் வாங்குவார்களாம். விவசாயி திரைப்படம் அங்கு 100 நாட்கள் ஓடியிருக்கிறது. படம் வெளியானபோது திரையரங்கத்தின் முன்பு வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். கட்-அவுட்டுக்கு 5 பவுன் தங்கச் சங்கிலி அணிவிக்கப்பட்டதாம். படம் ஓடிய 100 நாட்களும் அந்தத் தங்கச் சங்கிலி அப்படியே பத்திரமாக கட்-அவுட்டில் கிடந்ததாக எம்.ஜி.ஆர். ரசிகர்கள் சொல்கிறார்கள். கேட்கையில் வியப்பாகத்தான் இருக்கிறது!
அறிஞர் அண்ணா எழுதி, கலைஞர் மு.கருணாநிதியின் வசனத்தில் வெளிவந்த, வண்டிக்காரன் மகன் படம் இங்கு வெளியானது. அதில் கதாநாயகனாக நடித்த ஜெய்சங்கர் அப்போது திரையரங்கத்துக்கு வந்து ரசிகர்களை சந்தித்து இருக்கிறார். எம்.ஜி.ஆருடன் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து ஜெயலலிதா பிரபலமாகி வந்தநேரம். ஒருமுறை அங்கு வந்தபோது, சென்ட்ரல் டாக்கீஸ் திரையரங்கத்தின் முன்பு அவரைக் காண கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதாம்.
1958-ம் ஆண்டு இந்தி நடிகர் திலீப்குமார், வைஜெயந்திமாலா நடிப்பில் வெளியான மதுமதி என்ற இந்திப்படம் அதிக நாட்கள் ஓடியிருக்கிறது. இந்தத் திரையரங்கை திறம்பட நடத்திவந்த ஏ.எம்.சாகுல் அமீது உடல்நலக் கோளாறு ஏற்பட்டு 1965-ம் ஆண்டு தனது 58-வது வயதில் இறந்துவிட்டார். அதன்பிறகு திரையரங்கத்தை அவருடைய குடும்பத்தினர் நடத்தி வந்தனர்.
1983-ம் ஆண்டுக்குப் பிறகு அங்கு படங்கள் எதுவும் திரையிடப்படவில்லை. சுமார் 10 ஆண்டுகளாக திரையரங்கம் மூடப்பட்டு பாழடைந்த நிலையில் கிடந்தது. 1993-ம் ஆண்டு வாக்கில் திரையரங்கக் கட்டிடம் வேறு நபருக்கு கைமாறி இடித்து அகற்றப்பட்டு விட்டது. வாசகர்களுக்கு நினைவூட்ட தியேட்டரின் வடிவத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஓவியர் பிரான்சிஸ் வரைந்து கொடுத்தார். அதைத்தான் மேலே பார்க்கிறீர்கள். தற்போது அந்த இடத்தில் அரிசி மண்டியும், மளிகை மொத்த விற் பனை நிறுவனமும் இயங்கி வருகின்றன.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision