திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் மிதந்த இரண்டு சடலங்கள்.
சக்தி ஸ்தலங்களில் முதன்மையான மாரியம்மன் திருச்சி சமயபுரம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள மாரியம்மன் திருக்கோவில் தெப்பக்குளத்தில் இருந்து கிளம்பி அக்னி சட்டி, பால்குடம், குழந்தையை தொட்டிலில் வைத்து சுமந்து செல்வது என இங்கிருந்து தான் புறப்பட்டு செல்வார்கள்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் தெப்பக்குளம் அமைந்துள்ளது. இந்த தெப்பக்குளம் ஆழமாக இருப்பதால் பக்தர்கள் யாரும் குளத்தில் இறங்கி குளிக்க வேண்டாம் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதனையும் மீறி சில பக்தர்கள் தெப்பக்குளம் உள்ளே இறங்கி குளிக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை இரண்டு சடலங்கள் தெப்பக்குளத்தில் மிதந்தது. இந்த இரண்டு சடலங்களும் யார் என்பது குறித்து தகவல் தெரியவில்லை. இவர்கள் இருவரும் எப்பொழுது தெப்பக்குளத்தில் இறங்கினார்கள் எதற்காக இங்கு வந்தார்கள் என்பது குறித்த எந்த தகவலும் தெரியவில்லை.
உயிரிழந்த நிலையில் மிதந்த இரண்டு உடல்களில் ஒருவர் காக்கி சட்டை அணிந்திருந்த நிலையிலும் மற்றொருவர் சட்டை இல்லாத நிலையில் உடல்கள் மீட்கப்பட்டது. இது குறித்து சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தயாளன் மற்றும் உதவி ஆய்வாளர் கவிதா ஆகியோர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு உடல்களையும் தீயணைப்பு துறை வீரர்கள் குளத்தில் இறங்கி மீட்டனர். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் உடல்களை அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision