திருச்சி கொள்ளிடம் ஆற்றில் சரிந்து விழுந்த இரண்டு உயர் அழுத்த மின் கோபுரங்கள்

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் சரிந்து விழுந்த இரண்டு உயர் அழுத்த மின் கோபுரங்கள்

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நேப்பியர் வடிவ புதிய பாலத்தின் அருகே, (பழைய பாலம் இருந்த இடத்தில்) மண் அரிப்பை தடுக்க தடுப்பணை போன்ற தடுப்புச்சுவர் சமீபத்தில் கட்டப்பட்டது. கொள்ளிடம் ஆறு எவ்வித சேதமும் இல்லாமல் ஒரு வினாடிக்கு 3 லட்சம் கன அடி தண்ணீரை தாங்கிச்செல்லும் திறன் கொண்டது.

இதில் நேற்று இரவு ஒரு வினாடிக்கு 1லட்சம் கன அடி நீர் சென்றது. முதல் முறையாக தண்ணீரை எதிர்கொண்ட மண்ணரிப்பு தடுப்பு சுவரின், ஒரு பக்க சுவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும், அதன் அருகிலேயே உள்ள உயர் மின்னழுத்த கம்பிகளை தாங்கி நிற்கும் மின் கோபுரமும் மண்ணரிப்பால் சரிந்து விழும் நிலைக்கு சென்றுவிட்டது. இதனால் திருவானைக்காவல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் தடைபட்டுள்ளது. பின்னர் மாற்று மின்பாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டது.

மின் கோபுரம் சரிந்து விழுந்தும், மின் கம்பி அறுந்து விழுந்தும், விபத்து ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாகவும், விபத்தை தடுக்கும் நோக்கத்துடனும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்சி கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உள்ள திருவானைக்காவல் பகுதியையும், வடகரையில் உள்ள நம்பர் ஒன் டோல்கேட் பகுதியையும் இணைக்கும் திருச்சி கொள்ளிடம் ஆற்று நேப்பியர் வடிவ மேம்பாலத்தில் முற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மாற்றுப்பாதையாக, திருச்சி - சென்னை, திருச்சி - மதுரை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்று மேம்பாலத்தை மக்கள் வழக்கம் போல பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இரவு மின் கோபுரம் சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதுமில்லை. மேலும் இரண்டாவது ஒரு உயிர் அழுத்த மின் கோபுரமும் கொள்ளிடம் ஆற்றில் சரிந்து விழுந்து உள்ளது. இதனால் கொள்ளிடம் புதிய பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision