திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை (12.12.2023) தொடக்கம்
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், ஸ்ரீ பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில். இங்கு ஆண்டுதோறும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்தியயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பு பெற்றது. இந்த திருவிழாவில் பகல்பத்து, இராபத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் விழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை (12.12.2023) திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. பின்னர் பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான நாளை மறுநாள் (13.12.2023)புதன்கிழமை திருமொழி திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி நம்பெருமாள் அன்று காலை 07:00 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7:30 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் வந்தடைவார்.
பின்னர் காலை 8:00 மணி முதல் பகல் 12 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று 4000 திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவர். இதனை தொடர்ந்து இரவு ஏழு மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பருமாள் புறப்பட்டு இரவு 9:45 மணிக்கு மூலதனம் சென்றடைவார்.