அரசு உத்தரவை மீறி நடைபெற்ற கோயில் திருவிழாவில் அடிதடி மோதல். 8 பேருக்கு சிறை

அரசு உத்தரவை மீறி நடைபெற்ற கோயில் திருவிழாவில் அடிதடி மோதல். 8 பேருக்கு சிறை

கொரோனா தொற்று காரணமாக கோயில் திருவிழாக்கள் மற்றும் மத சம்பந்தப்பட்ட விழாக்கள் உள்ளிட்டவைகள் நடைபெற தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே தழுதாளப்யபட்டியில் கடந்த 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பக்தர்கள், பொதுமக்களோடு மாரியம்மன் கோவில் திருவிழா நடைப்பெற்றது.

இந்த திருவிழாவில் நடனமாடிய போது உள்ளூர் நபர்களுக்கும், வெளியூர் நபர்களுக்கும் அடிதடி மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ராசாம்பாளையத்தைச்  சேர்ந்த 20 வயதான சரத்குமார்,  பிரவீன்குமார், கோவத்தகுடியைச் சேர்ந்த 20 வயதான பாலமுருகன் ஆகியோர் காயமடைந்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் அனுமதியின்றி திருவிழா நடத்தியதாக தளுதாளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு, அதே ஊரைச் சேர்ந்த ஆனந்த், ராஜ்குமார் ஆகியோரையும் திருவிழாவில் தகராறில் ஈடுபட்டதாக ராசாம்பாளையத்தைச் சேர்ந்த மூர்த்தி, பாச்சூரைச் சேர்ந்த பிரவீன்குமார், சகாயரவி, அழகியமணவாளத்தைச் சேர்ந்த சரத்குமார், கோவத்தககுடியைச் சேர்ந்த பாலமுருகன் ஆகிய 8 பேர் மீது 144,148, 294, 323 மற்றும் 506 என 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் சிறுகனூர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையில் போலீசார் அவர்கள் 8 பேரையும் கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் மணப்பாறை கிளைச்சிறையில் அடைத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu