ஹெல்மெட்டால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட அத்தாணி கிராமத்தில் வசித்து வருபவர் ரகுநாத் (40). இவர் டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜீவா (35) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு இறைச்சி எடுத்து கொடுத்துவிட்டு வீட்டில் சமைக்க கூறிவிட்டு ரகுநாத் கடைவீதிக்கு சென்றுள்ளார். இதற்கிடையில் அவர்களது வீட்டில் அருகில் வைக்கப்பட்டிருந்த கல் ஒன்றை பக்கத்து வீட்டு பெண்ணான மாலதி எடுத்து பயன்படுத்தி உள்ளார். இதனை அறியாத ஜீவா இங்கிருந்த கல் எங்கே என தன் மகனிடம் கேட்டுள்ளார். மகனும் தெரியவில்லை என கூறியதை அடுத்து தந்தை வரட்டும் என கூறியுள்ளனர்.
பின்னர் மாலதி வீட்டில் இவர்களிடம் வாய் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகராறின் காரணமாக ஜீவா மற்றும் அவரது கணவர் ரகுநாத் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அத்தாணி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மாலதியின் மகன் வசந்தகுமார் மற்றும் மதுக்குமார் இருவரும் இவர்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாக்குவாதம் முற்றி ஹெல்மெட்டில் ஜீவாவை மற்றும் அவரது கணவர் ரகுநாத்தை தாக்கியுள்ளனர். இதில் ரகுநாத் தனது காலில் அடிபட்டு எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர் .
இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜீவா திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள்களின் ஆலோசனைப்படி உயர் சிகிச்சைக்காக சென்றார் .
கடந்த 20 நாட்களாக சிகிச்சையில் இருந்த ஜீவா வீட்டிற்கு வந்து தனக்கு தலைவலி, தலை சுற்றல் போன்ற பிரச்சனைகள் இருப்பதாக கூறியதால் அவரது தாயார் வீடான குளித்தலை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு நன்றாக பேசிக் கொண்டிருந்த ஜீவா திடீரென மயங்கி விழுந்து சுயநினைவின்றி கிடந்தார். உடனடியாக அருகில் இருந்த உறவினர்கள் ஜீவாவை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் .
இந்நிலையில் உடற்கூறு ஆய்வு முடிந்து இன்று அவரது கணவரின் வீட்டிற்கு உறவினர்கள் கொண்டு சென்றனர் அப்போது அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பெண்ணின் இறப்பிற்கு உரிய நியாயம் வேண்டும் என திருச்சி மணச்சநல்லூர் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மனச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் போலீசாரின் பேச்சுவார்த்தை ஏற்க மறுத்த அத்தானி கிராம மக்கள் சாலை மறியலை கைவிடுவதாக இல்லாமல் இருந்தனர்.
இதனால் மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது உடனடியாக இதுகுறித்து தகவலறிந்த வட்டாட்சியர் பழனிவேல் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பெண்ணின் இறப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் தாயை இழந்த இரண்டு குழந்தைகளின் வாழ்வாதாரத்தை தமிழ்நாடு அரசு பாதுகாக்கும் என தெரிவித்ததின் பெயரில் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision