திருச்சி | ஜனவரி 26, 2026
திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் சோழன் விரைவு ரயில் (Chozhan Express) நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வத் தொடக்க நிகழ்வில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. துரை வைகோ அவர்கள் கலந்துகொண்டு ரயிலை உற்சாகமாக வரவேற்றார்.

இன்று பகல் 12:30 மணிக்கு திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற சோழன் விரைவு ரயில் திருவெறும்பூர் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பயணிகள் மற்றும் மறுமலர்ச்சி திமுக தொண்டர்களுடன் இணைந்து, எம்.பி துரை வைகோ ரயிலுக்கு மலர்தூவி வரவேற்பு அளித்தார்.
நாகசுரம் மற்றும் மேள தாளங்கள் முழங்க, ரயில் ஓட்டுநர்களுக்குப் பட்டாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து, ரயில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கித் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட துரை வைகோ, அதே ரயிலில் திருவெறும்பூரிலிருந்து தஞ்சாவூர் வரை பயணிகளுடன் பயணம் மேற்கொண்டு அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

வெறும் ஒன்றரை ஆண்டு கால நாடாளுமன்றப் பணியில், இந்த முக்கிய நிறுத்தத்தைப் பெற துரை வைகோ மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது:
டிசம்பர் 12, 2024: திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் முதல் மனு.டிசம்பர் 18, 2024: டெல்லியில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தல்.2025 (ஜனவரி – ஜூலை): திருச்சி மற்றும் தென்னக ரயில்வே பொது மேலாளர்களைப் பலமுறை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்தல். டிசம்பர் 10, 2025: நாடாளுமன்றக் கேள்வி நேரத்தில் இப்பிரச்சினையை எழுப்பி, அமைச்சரின் எழுத்துப்பூர்வமான பதிலைப் பெற்றது.

ஏற்கனவே இவரது முயற்சியால் கடந்த 2025 அக்டோபர் மாதம் திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் இங்கு நின்று சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது சோழன் விரைவு ரயிலுக்கும் நிரந்தர நிறுத்தம் கிடைத்துள்ளதை அடுத்து, ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் எம்.பி-க்கு பயனாடை அணிவித்துத் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
“மக்களுக்குப் பயனுள்ள இதுபோன்ற தொடர் முயற்சிகள் பலனளிக்கும் போது, அவர்களை விட நான் அதிக மனநிறைவை அடைகிறேன்” என துரை வைகோ நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டி.டி.சி.சேரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments