எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு மிக அவசியத் தேவையாக உள்ள 15 வருட கோரிக்கையான திருவப்பூர் ரயில்வே கேட் (L.C.NO: 376), கருவேப்பிலான் ரயில்வே கேட் (L.C.NO: 372) ஆகிய பகுதிகளில் காலை, மாலை இருநேரமும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த இரு ரயில்வே கேட்டை கடந்து செல்லும்போது, உரிய நேரத்தில் தமது நிறுவனங்களுக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுவதாகவும், இந்த போக்குவரத்து நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என்றும், நான் திருச்சி தொகுதி வேட்பாளராக இருந்த சமயத்திலேயே மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நான், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதும், மாண்புமிகு ரயில்வே துறை அமைச்சர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் (NHAI), மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் இதுகுறித்து பலமுறை வலியுறுத்தி வந்திருக்கிறேன்.
இதனிடையே இந்த மேம்பாலப் பணிகளைத் துரிதப்படுத்தவும், தாமதங்களைத் தவிர்க்கவும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.01.2026) என் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அருணா அவர்கள் முன்னிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், ரயில்வே துறை அதிகாரிகள், மாநில நெடுஞ்சாலை அதிகாரிகள் மற்றும் நிலம் கையகப்படுத்தும் துறை அலுவலர்கள் அடங்கிய கூட்டுக் கூட்டத்தை நடத்தினேன்.
இந்தக் கூட்டம் காலை 10.30 மணிக்குத் தொடங்கி, பகல் 12.45 மணி வரை நடந்தது.
கூட்டத்தில் ஒன்றிய ரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில நெடுஞ்சாலைத் துறை என பல துறைகளின் ஒத்துழைப்பில் தான் இந்தப் பணிகள் முடிவடைய வேண்டும். ஆகவே, இனியும் தாமதம் வேண்டாம். புதுக்கோட்டை மக்கள் 15 வருடங்களாக இந்த போக்குவரத்து நெருக்கடியை அனுபவிக்கின்றனர். ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு கோப்புகள் நகர்வதில் பிரச்சனை இருந்தால் என்னிடம் தெரிவியுங்கள். நான் அந்தத் துறையின் உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்வேன் என்றேன்.
மேலும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும், இந்த இரு மேம்பாலப் பணிகளையும் விரைவில் தொடங்கி முடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதையும் அறிந்து கொண்டேன்.
திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியைப் பொறுத்தவரை, நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கான நடைமுறை இரண்டு மாதங்களில் முடிந்து விடும் என்றும். அதன்பின்பு ரயில்வே துறை பணிகளை மேற்கொண்டு 16 மாதங்களில் ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிவுற்று, மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும்.
கருவேப்பிலான் ரயில்வே கேட் பொறுத்தவரை, தற்சமயம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) திருச்சியில் இருந்து – காரைக்குடி வரை செல்லும் சாலையை ரூ.2000 கோடியில் நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு முடிவெடுத்துள்ளது. இந்தத் திட்டத்துடன் கருவேப்பிலான் ரயில்வே கேட் மேம்பாலம் திட்டம் சேர்க்கப்பட்டு, பாலம் அமைத்தல் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் ஆகிய பணிகளுக்கான முழுமையான செலவினத்தையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையமே ஏற்றிருக்கின்றது.
திருச்சி – காரைக்குடி நான்கு வழிச்சாலை பணிகளுக்கு தேசிய திட்டமிடல் குழுவின் ஒப்புதல் (NATIONAL PLANNING GROUP) இந்த ஜனவரி மாதம் துவக்கத்தில் கிடைத்துவிட்டது. வடிவமைப்பு ஒப்புதலும் (DESIGN APPROVAL) கிடைத்துவிட்டது. நிலம் கையகப்படுத்திடுவதற்கு முன்பு எந்தந்த நிலங்கள் என்பன குறித்த அறிக்கையை, பிப்ரவரி மாதத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பார்கள். 18 மாதங்களில் நிலம் கையகப்படுத்திடும் பணிகள் மற்றும் பிற பணிகள் நிறைவுற்று அரசாணை (G.O) வெளியிடப்படும். அதன்பின்னர் கருவேப்பிலான் கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணிகள் தொடங்கி, மூன்று வருட காலத்திற்குள் மக்களிடம் அர்ப்பணிக்கப்படும் என நம்புகிறேன்.
இந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் என்னுடன் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.கலியமூர்த்தி பங்கேற்றார் என்று கூறினார் துரை வைகோ, அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments