நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் இன்று (07.09.2025) திருச்சிராப்பள்ளி, காட்டூர் மாண்ட் போர்ட் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான விழாவில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற 2982 அரசு/ அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற 142 மாணவ, மாணவிகள் என மொத்தம் 3124 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நல்வாழ்த்துகளுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்விழாவில் பங்கேற்று 3124 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை இரண்டையும் ஒருசேர 10 ஆண்டு காலம் சிறப்பாக வழி நடத்திய பேராசிரியர் அன்பழகனார் அவர்களிடம் பல்வேறு விவரங்களை கற்றவர்கள் நாங்கள். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு தரப்படும் முக்கியத்துவம் போலவே உயர்கல்வித் துறைக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான புதிய கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தான் இந்த நான்கு ஆண்டுகளில் பள்ளி மாணவ மாணவிகளை பாராட்டுவது மற்றும் தலைமை ஆசிரியர்களை பாராட்டுவது ஆசிரியர் பெருமக்களை பாராட்டுவது என எல்லா தரப்பினரையும் முழு அளவில் பாராட்டி இருக்கிறார்கள் அந்த வகையில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இவ்விழாவில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களாகிய உங்களை பாராட்டுவது என்பது மிகவும் பொருத்தமான ஒன்றாகும்
தனியார் மருத்துவமனையை விட அரசு மருத்துவமனையில் தான் ஆற்றல்மிக்க மருத்துவர்கள் இருக்கிறார்கள் அதேபோல் எத்தனையோ பள்ளிகள் புதிது புதிதாக தோன்றினாலும் அரசு பள்ளிகளில் தான் மிகச்சிறந்த மாணவர்கள் தோன்றி சாதனை படைத்து கொண்டு இருக்கிறார்கள். அதற்கு காரணம் முழுக்க முழுக்க அரசு பள்ளி ஆசிரியர்கள் தான். அவர்கள் நன்கு பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களாகிய உங்களை இந்த தருணத்தில் பாராட்டுவது மிகச் சரியானது
பிற பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் சுலபமாக எடுத்து விடலாம் அது மிகவும் எளிது ஆனால் தமிழ் பாடத்தை பொருத்தவரையில் அதில் வருகின்ற ஒற்றுப்பிழைக்கெல்லாம் மதிப்பெண் குறைவதால் அதில் நூற்றுக்கு நூறு எடுப்பது மிகவும் அரிது. 12 ஆம் வகுப்பு பயிலும் 138 மாணவர்கள் நூற்றுக்கு நூறு எடுப்பதற்கும் 10 ஆம் வகுப்பு பயிலும் 8 மாணவ / மாணவிகள் நூற்றுக்கு நூறு எடுத்ததற்கும் முக்கிய காரணம் ஆசிரியர்கள் தான். எனவே அவர்களை பாராட்டுகிறேன்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு சார்பாக நடத்தப்படுகின்ற மிகப்பிரமாண்டமான இதுபோன்ற விழாக்களை வெற்றிகரமாக நடத்துவதற்காகவே நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு அருகில் ஒரு மிகப்பெரிய அரங்கம் அமைத்து தர ஏற்பாடு செய்யப்படும் எனவும், மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகுதான் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது என்று கூறினார் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நல்வாழ்த்துகளுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்விழாவில் பங்கேற்று 3124 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு பள்ளி கல்வி துறையின் குடும்ப உறுப்பினர்கள் ஆகிய தலைமையார்கள், ஆசிரிய பெருமக்களாகிய உங்களை பாராட்டி உங்களது உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் போது தான் உங்களுக்கு ஒரு ஊக்கத்தை தருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எப்பொழுதும் ஆசிரிய பெருமக்களுக்கு உற்றதுணையாக இருப்பவர். பேரறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதாக இருந்தாலும், பேராசிரியர் அன்பழகன் விருதாக இருந்தாலும், கனவு ஆசிரியர் விருதாக இருந்தாலும், பிற தனியார் அமைப்புகள் நடத்துகின்ற அன்பாசிரியர் போன்ற விருதுகளாக இருந்தாலும், துறை சார்ந்த ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கின்ற விழா எதுவாக இருந்தாலும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்கின்ற முறையில் நானும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்களும் முதலாவதாக அங்கு சென்று நின்று அவர்களுக்கு அங்கீகாரத்தையும் பாராட்டுதலையும் வழங்குகின்றோம்.
சென்ற ஆண்டில் நடைபெற்ற இதே விழாவில் பரிசு பெற்ற நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களை விட இவ்வாண்டு எண்ணிக்கைகள் மிக அதிகமாக இருப்பதற்கு காரணம் ஆசிரியர்களின் அயராத உழைப்பு ஆகும். குறிப்பாக தமிழாசிரியர்கள் மற்ற ஆசிரிய பெருமக்களை காட்டிலும் மாணவர்களால் போற்றப்படுகின்ற இடத்தில் இருப்பதால் தான் மாணவர்கள் தங்களது அன்பை வழிகாட்டு முகம் தான் மாணவர்கள் அப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதிக்கிறார்கள். ஆசிரியர்களை வணங்கும் போது மாணவ, மாணவிகள் அழைக்கும் விதத்தை காட்டிலும் தமிழ் ஆசிரியர்களை வணக்கம் தமிழ் அம்மா, தமிழய்யா என்று அழைக்கின்ற அந்த நிகழ்வான தருணம் தான் இனிமையானது. பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்க கூடிய ஒவ்வொரு திட்டத்தின் சார்பாகவும் ஆசிரியர் பெருமக்களை பாராட்ட வேண்டும் என்பது என்னுடைய ஆசை காலமும் நேரமும் வாய்க்கின்ற பொழுது அத்தகைய ஆசையும் நிறைவேறும்.
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்த பிறகு அங்கு சென்று பார்த்து படிக்கின்ற மாணவர்கள் எல்லோரும் தாங்கள் புதிதாக வாசகர்களாக மாறி இருப்பதை உணர்ந்து நம்மை பாராட்டுகிறார்கள். பள்ளி தோறும் திறன்மிகு வகுப்பறை (ஸ்மார்ட் போர்டு) கொண்டு வந்து கற்றல் கருத்துக்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய போது அதனை உணர்ந்த ஆசிரிய பெருமக்கள் அனைவரும் நம்மை பாராட்டுகிறார்கள். வாசிப்பு இயக்கம் என்று வருகின்ற பொழுது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் நம்மை பாராட்டுகிறார்கள். TN ஸ்பார்க் இன்னும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வருகின்ற பொழுது அதன் திறமையை உணர்ந்த பத்திரிக்கையாளர்களும் ஊடகவியலாளர்களும் தமது சமூக வலைதளங்கள் முழுவதிலும் நம்மை பாராட்டுகிறார்கள். இத்தகைய திட்டங்கள் அனைத்திற்கும் பின்புலமாக இருந்து நம்மை இயக்குவது கட்டாயமாக ஒரு ஆசிரியராக தான் இருக்க முடியும். இன்று தலைமையாசிரியர்களை நாம் பாராட்டுகிறோம். என்று சொன்னால் ஒரு கப்பலின் கேப்டனாக இருந்து செயல்படுகின்ற தலைமையாசிரியரை தான் அந்த புகழ் சென்று சேரும்.
படைப்புத்திறன் பகுப்பாய்வுக்காக இதுவரை 22 மாவட்டங்களை பார்வையிட்ட நான் அங்கு பணிபுரிகின்ற தலைமை ஆசிரியர்கள் கூறுகின்ற தன்விளக்கத்தை கேட்டு மிகவும் அதிசயத்திருக்கின்றேன் அவர்கள் உண்மையில் எனது பள்ளி அடைவு திறனில் குறைந்துள்ளது ஆனால் வருகின்ற காலங்களில் நிச்சயமாக அதனை சரி செய்து விடுவேன் என்று உண்மையை கூறி நம்மை மெய்சிலிர்க்க வைத்து விடுகிறார்கள் என்றும் கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இருந்து நான் மிகப்பெரிய பாராட்டை பெற்றிருக்கின்றேன். நான் பொறுப்பேற்று இருக்கின்ற இந்த காலம் தான் பள்ளி கல்வித்துறையின் பொற்காலம் என்று முதலமைச்சர் அவர்கள் பாராட்டிய பாராட்டிற்கு பின்புலமாக இருப்பது பள்ளிக் கல்வித்துறை என்கின்ற மிகப்பெரிய குடும்பம் ஆகும் என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் அவர்கள், மண்டல தலைவர் திரு.மு.மதிவாணன், இயக்குனர் பள்ளிக்கல்வித்துறை முனைவர் ச.கண்ணப்பன், இயக்குனர் தொடக்கக் கல்வி இயக்கம் முனைவர் பூ.ஆ.நரேஷ், இயக்குனர் அரசு தேர்வுகள் இயக்கம் திருமதி க.சசிகலா, தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் துணைத் தலைவர் திரு.முத்துக்குமார், இணை இயக்குனர் பள்ளிக்கல்வித்துறை திருமதி சாந்தி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி கிருஷ்ண பிரியா, தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments