திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி நடைபெற்றது என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026-ஐ முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளின் அனைத்து வாக்குசாவடிகளிலும் பணியாற்ற உள்ள வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதலாவது சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறையானது (1st Randomization) 23.03.2026 அன்று முடிவடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு இன்று (28.03.2026) குறிப்பிட்ட இடங்களில் முதலாவது கட்ட பயிற்சி நடைபெற்று வருகிறது.

சட்டமன்ற தொகுதி வாரியாக பயிற்சி நடைபெறும் இடங்கள் மற்றும் கலந்து கொண்டவர்களின் விபரம் பின்வருமாறு: 138-மணப்பாறை தொகுதிக்கு லெட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மணப்பாறையில் 2254 நபர்களுக்கும், 139 ஸ்ரீரங்கம் தொகுதிக்கு ஸ்ரீ மத் ஆண்டவர் கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீரங்கத்தில் 1464 நபர்களுக்கும், 140-திருச்சிராப்பள்ளி (மேற்கு) தொகுதிக்கு பிஷப் ஹீபர் கல்லூரி, புத்தூரில் 1314 நபர்களுக்கும் பயிற்சிகள் நடைபெறுகின்றன. 141-திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதிக்கு புனித சிலுவை மகளிர் கல்லூரியில் 1646 நபர்களுக்கும், 142-திருவெறும்பூர் தொகுதிக்கு மான்ட்போர்ட் பள்ளி, காட்டூரில் 1211 நபர்களுக்கும், 143-இலால்குடி தொகுதிக்கு நெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இலால்குடியில் 1301 நபர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும், 144-மணச்சநல்லூர் தொகுதிக்கு அரசு மாதிரி பெண்கள்

மேல்நிலைப்பள்ளியில் 831 நபர்களுக்கும், 145-முசிறி தொகுதிக்கு கொங்குநாடு பொறியியல் கல்லூரி, ஏலூர்ப்பட்டியில் 2063 நபர்களுக்கும், 146-துறையூர் தொகுதிக்கு சௌடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, துறையூரில் 1292 நபர்களுக்கும் பயிற்சி நடைபெறுகிறது.
மேற்கண்டுள்ள பயிற்சியினை சட்டமன்ற தொகுதி வாரியாக கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட வருவாய் அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு, சட்டமன்ற தொகுதி வாரியாக பள்ளிக்கல்வி துறை சார்பாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டு, மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை கையாளும் முறை

குறித்தும், வாக்குசாவடியில் வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்தப்படும் படிவங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பயிற்சி மையங்களில் அடிப்படை வசதிகள், உரிய காவல்துறை பாதுகாப்புகள், மருத்துவ மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
138 மணப்பாறை மற்றும் 140 திருச்சிராப்பள்ளி (மேற்கு) ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வரும் பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, உரிய அறிவுரைகள் வழங்கினார். அதேபோல், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்களான திரு.ஆர்.பாலாஜி, திருமதி.சி.முத்துமாரி, திருமதி.கோ.செந்தில்குமாரி, திரு.ஆர்.ரமேஷ்,

திருமதி.ஆர்.ரம்யாதேவி மற்றும் திரு.ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி வாரியான பயிற்சி மையங்களை ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்கினர். இச்செய்தி குறிப்பினை உதவி இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திருச்சிராப்பள்ளி வெளியிட்டுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments