திருச்சி கல்லணை நடுக்கரை பகுதி ஊர்களில் காட்டுப்பன்றிகள் கடித்து குதறியதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விவசாய அணி நிர்வாகி, விவசாயி என இரண்டு பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து, காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறை 2 குழுக்கள் அமைக்கப்பட்டு, கூண்டு, வலை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் கல்லணை நடுக்கரை பகுதி ஊர்களான கிளிக்கூடு, உத்தமர்சீலி, பனையபுரம், திருவளர்சோலை, பொன்னுரங்கபுரம் ஆகியன உள்ளன. இந்த பகுதிகளில் பிரதான தொழிலாளாக விவசாயம் உள்ளது.
கல்லணை நடுக்கரை பகுதி என்பது காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. அங்கு காட்டு பன்றிகள் காவிரி, கொள்ளிட ஆறுகள் வழியாக வந்து இந்தப்குதியில் தஞ்சம் புகுந்துள்ளன.
அவ்வாறு தஞ்சம் புந்துள்ள காட்டுப் பன்றிகள் அப்பகுதியில் பயிர் செய்யப்படும் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பெரிய அளவில் சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் சேதத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் காட்டு பன்றிகளை பிடிக்க வேண்டுமென வானத்துறையினருக்கும், அரசுக்கும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.
இருந்தும் காட்டு பன்றிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், பயிர்களை சேதப்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கவுத்தரசநல்லூர் பகுதியில் கொய்யா தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி அங்கு இருந்த விவசாயி சகாதேவன் (45) என்பவரை கடித்து குதறியதோடு, தொடையின் பின்பக்கம் பன்றியின் கொம்பு குத்தியது பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்தம் நிற்காத நிலையில் அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
அதேபோல் நேற்று முன்தினம் மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட விவசாய அணி முன்னாள் தலைவரான உத்தமர்சீலியைச் சேர்ந்த கணபதி (70) என்பவர் உத்தமர்சீலியில் உள்ள தனது வாழைத்தோட்டத்திற்கு சென்றபோது, அங்கு வந்த காட்டுப்பன்றி கணபதியை பல இடங்களில் குடித்துக் குதறியது. இதில் கணபதி பலத்த காயமடைந்தார்.
இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் அப்பகுதி மக்கள் ஓடிச் சென்று கணபதியை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கணபதி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் எஸ்.கிருத்திகா, திருச்சி வனச்சரகர் வி.பி.சுப்பிரமணியம் மற்றும் வனத்துறையினர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், பன்றி தாக்கிய பகுதிகளையும் பார்வையிட்டனர்.
தொடர்ந்து நேற்று காலையில் சம்பவ இடத்தை பார்வையிட்டு காட்டுப்பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து நம்பர் 1 டோல்கேட் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று திருச்சி ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிடத் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத் தோட்டத்தை சேதப்படுத்திய காட்டு பன்றியை விரட்ட சென்ற உத்தமர்சீலியை சேர்ந்த விஜயகுமார் என்பவரை கடித்துக் குதறியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் ஆயிரத்தக்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் வசித்து வருகின்றன. தொடர்ந்து விவசாய நிலத்தை சேதப்படுத்தி வருகின்றன. அவற்றை பிடிக்க மாவட்ட நிர்வாகம், வனத்துறையினரிடமும் பலமுறை முறையிட்டோம். உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்காது’ என்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியது:
காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே சுமார் ஆயிரம் ஏக்கர் பகுதி முழுவதும் விவசாயம் நிலங்களாக உள்ளன. காப்புக்காடு பகுதி இல்லை. காட்டுப்பன்றிகள் அப்பகுதியில் காலங்காலமாக இருந்து வருகின்றன. காட்டுப்பன்றிகள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் கூட்டம் கூட்டமாக கோரை புல் பகுதிகளும், சேறும் சகதியும் நிறைந்தும், கிழங்கு வகைகளும் நிறைந்து காணப்படுகிறது. எனவே காட்டுப்பன்றிகள் ஆரம்பகாலம் தொட்டே வனப்பகுதிகளிலிருந்து இங்கு இடம் பெயர்ந்து வசித்து வருகின்றன. வெடி வெடித்ததாலோ அல்லது நாய் கடித்ததால் பாதிக்கப்பட்ட ஆவேசமடைந்த ஆண் காட்டுப்பன்றி தான் விவசாயிகளை தாக்கியிருக்கக்கூடும் என கருதுகிறோம். மூர்க்கமாக திரியும் காட்டுப்பன்றியை பிடிப்பதற்காக இரண்டு இடங்களில் கூண்டு, வலை அமைக்கப்பட்டுள்ளது. வனவர்கள் துளசிமலை, சக்திவேல் ஆகியோர் தலைமையில் தலா 5 பேர் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து காட்டுப்பன்றியை கண்காணித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் எத்தனை காட்டுப்பன்றிகள் உள்ளது என கணக்கெடுத்து அவற்றை காப்புக்காடு பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் ஆலோசித்து வருகிறோம்’ என்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments