உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சியில் மியோவாக்கி முறையில் 2000 மரக்கன்றுகள்!
தமிழகத்தில் முதல்முறையாக திருச்சி மாநகராட்சியின் சார்பாக அடர்காடு உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பாக மியோவாக்கி முறையில் அடர்காடு உருவாக்கும் திட்டம் திருச்சியில் செயல்படுத்தப்பட்டு முதல்கட்டமாக 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.
அக்கிரா மியோவாக்கி என்ற ஜப்பான் தாவரவியலாளர் அவர்களால் உருவாக்கப்பட்டு 4 கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டு உள்ளார். இது பத்து மடங்கு வேகமாகவும் 30 மடங்கும் அடர்த்தியாகவும் வளரும். இம்முறையே நமது திருச்சியில் முதல்முறையாக கையாளப்படுகிறது.
இந்த அடர் காடுகள் உருவாக்கப்பட்டு மக்கள் இக்காடுகளில் நடக்கும் வாய்ப்பினை மாநகராட்சி அளிக்கிறது. இந்நிலையில் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புங்கமரம், பாதாம், வேங்கை, வாகை, ஈட்டி, மலைவேம்பு, வேப்பமரம், மருதாணி, கொய்யா, இட்லி பூ என 2000 மரக்கன்றுகள் ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நடப்பட்டு இந்த அடர் காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த மியோவாக்கி முறைக்காக ஆழ்துளைக்கிணறு அமைத்தும், சொட்டுநீர் பாசனம் அமைத்தும் இதனை பராமரிப்பதற்காக ஒரு குழுவை நியமித்து எப்படி முன்பு இந்த 10000 மரக்கன்றுகளை பாதுகாத்தார்களோ அதேபோல இம்மரக்கன்றுகளையும் பாதுகாப்பார்கள்!
இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் வைத்தியநாதன், திருச்சி மாநகராட்சி நகர பொறியாளர் அமுதவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழகத்திலேயே முதல்முறையாக முன்னெடுத்து வைக்கும் திருச்சி மாநகராட்சியில் மாற்றங்களை நிகழ்த்த, பசுமையை காக்க,எழுத்துக்களை செயலாக்க, இனிவரும் காலங்களில் மேலும் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சமவெளியில் காடுகளில் உருவாக்கும் பணியில் களமிறங்கியுள்ளனர்.