திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தை மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி பேசியதாவது:
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று 51 மாதங்களில் மக்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்கள் 10% கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால், 98 சதவீதம் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாக திமுகவினர்
பச்சை பொய்யை கூறி வருகின்றனர். கவர்ச்சிகரமாக பேசி நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை வெளியிட்டு ஓட்டு வாங்கியவர்கள் திமுகவினர். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்தால், கட்டுப்பாட்டு நிதியின் வாயிலாக வெளிமாநிலங்களில் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி மக்களுக்கு விநியோகம் செய்தது அ.திமுக அரசு.
மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் போது விலைவாசி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுப்போம். மக்கள் பாதிக்காமல் பாதுகாத்த அரசு அதிமுக தான். அமைச்சர் நேரு பேசுகையில் எம்ஜிஆருக்கு பெண்களிடம் இருந்த செல்வாக்கை போல் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இருப்பதாக தெரிவித்தார். எம்ஜிஆருக்கு என்று தனி அடையாளம் உள்ளது. அவருக்கு இணையாக யாரும் இல்லை. அவருக்கு இணையாக வைத்து யாரையும் பேச முடியாது. அதிமுக சட்டசபையில் அழுத்தம் கொடுத்ததால் தான் மகளிர் உரிமை தொகையை கொடுத்தது திமுக அரசு. ஓட்டுக்களை வாங்கும் வரை அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் திமுகவினர் பேசுவார். ஆட்சிக்கு வந்துவிட்டால் அதை மறந்து விடுவர். அடுத்த ஆண்டு தேர்தல் வரவிருப்பதால் விடுபட்ட 30 லட்சம் பேருக்கு உரிமை தொகை வழங்குவதாக ஸ்டான் அறிவித்து உள்ளார். சட்டசபை தேர்தலுக்காக விதியை தளர்த்தி உரிமை தொகை வழங்குவதாக அறிவிக்கின்றனர். திமுக செல்வாக்கு இழந்து விட்டதால், வரும் தேர்தலில் தோல்வி உறுதி. தேர்தல் பயம் காரணமாகவே முதல்வர் ஸ்டாலின் 30 லட்சம் பேருக்கு உரிமை தொகை வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.
தமிழக டிஜிபி ஓய்வு பெற உள்ள நிலையில் 3 மாதங்களுக்கு முன் புதிய டி.ஜி.பி பட்டியலை அனுப்பி இருக்க வேண்டும். புதிதாக நியமனம் செய்யப்பட வேண்டிய டிஜிபிக்களின் பட்டியலை இதுவரை தமிழக அரசு யு.பி.சி., க்கு அனுப்பவில்லை. இதில் ஏதோ ஒரு உள்நோக்கமும், கோளாறும் இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் ஆறு போலீசார் கொலை செய்யப்பட்டுள்ளனர். போலீசாருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும் அளவுக்கு தி.மு.க. அரசு செயல் இழந்து விட்டது. திமுக குடும்பத்திடம் அடிமை சாசனம் எழுதிய கொடுத்தவர்கள் தமிழக அமைச்சர்கள். அதிமுக அமைச்சர்கள் மக்களுக்காக இருந்தனர். தமிழகம் கருணாநிதி குடும்பத்திற்காக பட்டா போடப்பட்டுள்ளதா? கருணாநிதி குடும்பத்தினர் தான் கட்சி பதவிகளில் உள்ளனர். 2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கும், வாரிசு அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்க வேண்டும்.
மின் கட்டண உயர்வால் தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் பாதித்துள்ளன. குப்பைக்கு வரி விதித்த அரசு திமுக ஆட்சி தான். இப்படிப்பட்ட அரசு மீண்டும் தொடர வேண்டுமா? இந்தியாவிலேயே 5 லட்சத்து 18 ஆயிர ம் கோடி அளவுக்கு அதிக கடன் வாங்கியது தமிழகம் என்ற பெருமையை வாங்கிக் கொடுத்தவர் முதல்வராக இருக்கும் ஸ்டாலின். விவசாயிகளின் நிலத்தை பிடுங்கியது திமுக அரசு. விவசாயிகளை பாதுகாத்து காப்பாற்றியது அதிமுக அரசு. மக்களுக்கு துன்பம் ஏற்படும் போதெல்லாம் அதிலிருந்து விடுவித்து அவர்களை பாதுகாத்தது அதிமுக அரசுதான். வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஓட்டளித்தால் எல்லா பிரச்சனைகளும் சால்வாகிவிடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments