மூன்று தமிழர்களின் உயிரைக் காத்து, அவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவர வலியுறுத்தி,
நேற்று, மீண்டும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை வைத்தேன்;
இன்று, அக்கோரிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நற்செய்தி கிடைக்கப் பெற்றேன்.

கடந்த 11.10.2025 அன்று கம்போடியாவில் வேலை என்று ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து தாய்லாந்து வழியாக மியான்மருக்கு கடத்தப்பட்டு, குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுவந்த
இந்தியர்களான தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த மதன் குமார், சித்திரை செல்வகுமார் மற்றும் நவீன் குமார் ஆகிய மூன்று தமிழர்களின் குடும்பத்தினர், கடந்த 01.11.2025 அன்று என்னை, என் திருச்சி நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, அம்மூவரையும் காப்பாற்றித் தருமாறு கேட்டுக்கொண்டனர்.

அன்றே செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து, இதுபோன்று இனி யாரும் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவும், இவர்களை மீட்க வேண்டுமென்பதற்காகவும் விழிப்புணர்வு பேட்டி ஒன்றை அளித்தேன்.
அதன்பிறகு, மியான்மரில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அம்மூன்று தமிழர்களின் உயிரைக் காத்து, அவர்களை மீட்டு இந்தியா அழைத்துவர வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், அமைச்சகத்துக்கும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தேன். அதில் அம்மூவரின் முழு விவரங்களையும் இணைத்திருந்தேன்.

அதன்பிறகு, நேற்று (12.12.2025) மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெயசங்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் சந்தித்து, எனது 19.11.2025 தேதியிட்ட மின்னஞ்சலை நினைவூட்டி, மூன்று இந்தியர்களின் உயிரைக் காக்கும் எனது கோரிக்கையின் அவசியத்தையும் அவசரத்தையும் எடுத்துரைத்து கோரிக்கை கடிதம் வழங்கினேன்.

ஒன்றிய வெளியுறவுத்துறை எனது கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, மியான்மர் நாட்டில் யாங்கூன் நகரில் உள்ள நமது இந்தியத் தூதரகத்தின் தொடர் முயற்சியால், உள்ளூர் மியான்மர் அதிகாரிகளின் துணையோடு மூன்று தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்ற மகிழ்ச்சிகரமான தகவலைத் தெரிவித்துள்ளது.
இத்தகவலை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரின் அலுவலகத்திலிருந்து நேருதவி செயலர் திரு. பிபூதி நாத் பாண்டே அவர்கள் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்.
மேலும் அம்மின்னஞ்சலில், உரிய அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அவர்கள் மூவரும் நாடு திரும்பும் விவரங்களை எனக்குத் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நற்செய்தி கிடைத்த மறுநிமிடமே அம்மூவரின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவித்தேன்.
உண்மையோடும் நம்பிக்கையோடும் முழு மூச்சாய் செயல்படும் மக்கள் பணி சார்ந்த எந்த நல்ல காரியத்திற்கும் இறைவனும் இயற்கை சக்தியும் துணை நிற்கும் என்ற எனது நம்பிக்கைக்கு மீண்டும் ஒரு சாட்சியமாக இந்த வெற்றி அமைந்துள்ளது.
அம்மூவரையும் நம் தாய்மண்ணில் சந்திக்க, அவர்களது குடும்பத்தில் ஒருவனாக நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments