திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அ.தி.மு.க. பகுதி செயலாளராக பதவி வைத்தார். இவரது மனைவி கயல்விழி சேகர். இவர் கவுன்சிலராக இருந்தார். இவர்கள் கேபிள் டி.வி. தொழில், பைனான்ஸ் மற்றும் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களது மகன் முத்துக்குமார் (29 ). இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துவிட்டு தொழிலை கவனித்து வந்தார். இந்நிலையில் பன்றி வளர்ப்பு தொழில் தொடர்பாக கேபிள் சேகர் குடும்பத்தினருக்கும், அவரது அண்ணன் பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேபிள் சேகரை பெரியசாமியின் மகன் சிலம்பரசன் வெட்டி கொலை செய்தார். அதன் பின்னர் கடந்த 2021ல் பழிக்கு பழியாக சிலம்பரசனை, கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் தரப்பினர் வெட்டி கொலை செய்ததாக கூறப்பட்டது.

இந்த முன் விரோதத்தில் சிலம்பரசனின் தம்பி லோகநாதன், முத்துக்குமாரை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டி வந்த நிலையில், நேற்று 6 பேர் கொண்ட கும்பல் முத்துக்குமாரை அரியமங்கலம் பகுதியில் பட்டப் பகலில் வழிமறித்து ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக கொலையாளிகள் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் லோகநாதன் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து முத்துக்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் தப்பி ஓடிய முக்கிய குற்றவாளியான லோகநாதனை கைது செய்தனர். அதன் பின்னர் அவரது கூட்டாளிகளான அரியமங்கலம் அம்பிகா புரத்தைச் சேர்ந்த குமரேசன் ( 24), இளஞ்செழியன் ( 24), தினேஷ் என்கிற கூல் தினேஷ் ( 24), பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்கிற டேஞ்சர் மணி ( 37) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தப்பிச்சென்ற ஒருவரை தேடி வருகின்றனர்.

கைதான லோகநாதன் போலீசில் கொலை சம்பந்தமாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது…… எனது தந்தை பெரியசாமி அதிக அளவு பன்றி வளர்த்து அதன் மூலம் அதிக வருமானம் ஈட்டி வந்தார். பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் திடீரென இறந்து விட்டார். அதன் பின்னர் தொழில் முழுவதும் எனது சித்தப்பா கேபிள் சேகர் கைக்கு சென்றது. அவர் அந்த வருமானத்தை தனது மனைவி குழந்தைகளுக்கு செலவழித்து வசதியாக வாழ வைத்தார். நான் மட்டும் இல்லாமல் எனது சகோதரர்கள் தங்கமணி, சிலம்பரசன், ஆகியோர் உள்ளூர் மாநகராட்சி பள்ளிகளில் படித்தனர். ஆனால் சித்தப்பாவின் மகன் மகள்கள் ஊட்டி தனியார் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்தனர். இந்த ஏற்றத்தாழ்வு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது.

பின்னர் எங்கள் அண்ணன் சிலம்பரசன் வளர்ந்து ஆளாகிய பின்னர் சொத்தை பிரித்து தருமாறு கேட்டோம். அதற்கு கேபிள் சேகர் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் அவரை கொலை செய்தோம். இந்த முன் விரோதத்தில் எனது அண்ணன் சிலம்பரசனை முத்துக்குமார் கொலை செய்தார். இதனால் முத்துக்குமாரை தீர்த்து கட்ட தக்க தருணம் பார்த்து வந்தோம். திட்டமிட்டபடி நேற்று நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து அவரை தீர்த்து கட்டினோம் என வாக்குமூலம் அளித்துள்ளார். சொத்துப் பிரச்சனைக்காக சொந்த சித்தப்பாவை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           27
27                           
 
 
 
 
 
 
 
 

 01 May, 2024
 01 May, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments