ஜோசியம் பார்ப்பதாக கூறி 7 பவுன் செயின் பறிப்பு - 2 பெண்கள் கைது
திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே மேலரசூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (70). இவருக்கு சொந்தமாக சூப்பர் மார்க்கெட் உள்ளது. நேற்று இவரும், இவரது மனைவி ஜோதியும் வீட்டில் இருந்தனர். அப்போது திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அரங்கூர் கிராமத்தைச் சார்ந்த விஜயகாந்த், அவரது மனைவி பிரியதர்ஷினி, விஜயகாந்தின் தங்கை தெய்வானை ஆகிய மூவரும் அங்கு வந்துள்ளனர்.
பின்னர் தங்கவேலுவுக்கு ஜோசியம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்த அவரது மகன் உள்ளிட்ட உறவினர்களை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறியுள்ளனர். பின்னர் குறி சொல்வதாக கூறி அவர்கள் வீட்டில் இருந்த எண்ணையை எடுத்து விஜயகாந்த் தங்கவேல் மற்றும் அவரது மனைவியின் தலையில் தேய்த்து விட்டு பல் வேறு மந்திரங்கள் கூறியுள்ளார். பின்னர் தங்கவேலின் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் செயின் மற்றும் ரூ.5 ஆயிரம் பணத்தை ஏமாற்றி பறித்து கொண்டு வெளியே சென்றுள்ளனர்.
சற்று நிதானம் வந்த தங்கவேல் தனது கழுத்தை பார்த்தபொழுது நகையை காணாமல் திடுக்கிட்டார். சுதாரித்த தங்கவேல் தனது கழுத்தில் இருந்த செயின் காணவில்லை என்று கூறியதையடுத்து தங்கவேல் மகன் மற்றும் அவரது உறவினர் கள் விஜயகாந்தை பிடிப்பதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் விரட்டி சென்றனர். அப்பொழுது கீழரசூர் வழியாக விஜயகாந்த் பைக்கில் சென்று தலைமறைவாகி விட்டார். அவருடன் வந்த பிரியதர்ஷினி, தெய்வானையை பொதுமக்கள் பிடித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு கிராமங்களில் குறி சொல்வதாக கூறி வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடமும் நகை, பணம் திருட்டு நடந்து வருகிறது.
கடந்த வாரம் கல்லக்குடி பேரூராட்சி பகுதியில் 5 வீடுகளில் நள்ளிரவு பணம், நகை திருட்டு போய் உள்ளது. இந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். இது குறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் 2 பெண்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் தலைமறைவான விஜயகாந்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision