அழிக்கப்பட்ட 75 வருட மரங்கள் - நடவடிக்கை எடுக்க கோரி மனு.
திருச்சிராப்பள்ளி மாநகரில் உள்ள பொன்மலை பகுதியில் உள்ள 75 வருட பழமையான வேப்பமரம், ஆலமரம் மற்றும் அரசமரம் போன்றவற்றை ரயில்வே நிர்வாகத்தினர் பல்வேறு காரணங்களுக்காக வேருடன் வெட்டி வருகின்றனர்.
இதுகுறித்து கடந்த மார்ச் மாதம் மேலகல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த கட்டுமான பொறியாளர், Er.E.தென்னரசு BE, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது..... ரயில்வே நிர்வாகத்தினர் பொன்மலையில் மேற்கொள்ளும் பல்வேறு பணிகளுக்காக கடந்த மார்ச் மாதம் திருச்சி பொன்மலை பகுதியில் 75 வருடங்கள் பழமையான பல்வேறு வகையான மரங்களை வேரோடு பிடுங்குவது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தேன்.
அந்த கோரிக்கை மனுவிற்கு ஐந்து மாதங்களுக்கு பிறகு பதில் அனுப்பியிருந்த நிலையில், என்னுடைய மனுவை கோட்டாட்சியருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள்ளாகவே பல மரங்கள் வெட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து கோட்டாட்சியர், ரயில்வே துறை கோட்ட மேலாளரிடம் பதிலளிக்க கூறியிருந்த நிலையில், அவர் கருவேல மரங்களை வெட்டுவதற்கான வாங்கிய அனுமதியை காட்டி, அனுமதியின் பெயரில் தான் மரங்களை வெட்டியுள்ளோம் என்று கூறினார்.
கருவேல மரங்களை வேரோடு வெட்டி எடுக்க வாங்கிய அனுமதியில், மற்ற மரங்களை வெட்டி வேறு இடங்களுக்கு கொண்டு சென்றது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளது. இதற்கு முறையான அனுமதி வாங்கியிருக்க வேண்டும். ஆனால் அதுகுறித்த விவரங்கள் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. அதனால் தற்போது மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, ரயில்வே நிர்வாகம் மூலம் மேற்கொண்டு வரும் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு, மரங்களை வெட்டியதன் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision