மழை காலங்களில் திருச்சி மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது வழக்கம். இதில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மாநகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் காலி மனைகளில் தேங்கும் மழைநீர் மாதக்கணக்கில் வற்றாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது.
இதனால் கொசு உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது. மழைகாலங்களில் தொற்றுநோய் பரவுவது ஒருபுறமிருந்தாலும் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் காலி மனையில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.

மரத்துகள்களை துணியில் சுற்றி பந்து போல சுருட்டி அதனை காலாவதியான ஆயிலில் ஒரு வாரம் ஊற வைத்து தேங்கி கிடக்கும் தண்ணீரில் போட்டால் அந்த ஆயில் மேல் பகுதியில் படர்வதால் கொசு புழுக்கள் சுவாசிக்க முடியாமல் இறந்துவிடும். இதற்காக 4 மண்டலங்களிலும் தலா 150 களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகராட்சி நகர் நல அலுவலர் யாழினி தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளை கண்டறிந்து பணியாளர்கள் மூலம் ஆயில் பந்துகளை போட்டு வருகின்றனர். இதன் மூலம் கொசு உற்பத்தியை தடுக்கப்படுகிறது. தற்பொழுது திருச்சியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீடுகளிலும் வணிக நிறுவனங்களும் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள், பழைய டயர்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision







Comments