திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் இன்று (10.07.2022) மாலை நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அர்ஜுன் சம்பத் கூறுகையில்… இசைஞானி இளையராஜா உள்ளிட்ட 4 பேருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கியமைக்கு பாராட்டு தெரிவித்துக் கொண்டார். இளையராஜாவுக்கு எம்.பி பதவி கிடைத்தது அனைவருக்கும் கிடைத்த கௌரவம், இதனை அரசியல் ஆக்க கூடாது அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்.
75வது சுதந்திரதின விழா கொண்டாட்டங்களை தமிழக அரசு திறம்பட செய்யவில்லை எனவும், கடமையிலிருந்து தமிழக அரசு தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை இருக்கும் பட்சத்தில் தமிழ்நாடு தனிநாடு என பிரிவினைவாதம் பேசுவது தவறானது. தமிழகத்தை மூன்றாக பிரிக்கும் கோரிக்கைக்கு தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி மிகவும் மோசமான நிலையில் உள்ளது, 40,000 பேர் தமிழ் பாடத்தில் பெயில் ஆகியுள்ளனர். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பட்சத்தில் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அடையும். உதயநிதி ரசிகர்மன்ற தலைவராக இருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதயநிதி முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். புதிய கல்விக் கொள்கையில் நல்ல திட்டங்களை செயல்படுத்த அவர் முயல வேண்டும்.
தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படவில்லை, அதிகாரிகளுக்கும் ஆட்சியர்களுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுயாட்சி மற்றும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள டாஸ்மாக் ஒழிப்பு பிரச்சார பயணத்திற்கும், ஊழல் ஒழிப்பு முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார். லீலா மணிமேகலை பெண்ணியம் என்ற போர்வையில் ஆபாசம், வக்கிர சிந்தனை மிகுந்தவர். கடவுள் பக்தி இல்லை என்று பிரகடனப்படுத்திவிட்டு காளியைப் பற்றி அவதூறாக சித்தரித்து படம் வெளியிடுவது தவறானது. அதேபோன்று இந்து கடவுள்களை மற்றும் இந்து கோவில்களை பற்றி தவறான கருத்துக்கள் ஓவியங்கள் வெளியிடுபவர்களை கைது செய்யப்படுவதில்லை என்பது கண்டிக்கத்தக்கது.
திமுகவினரை இத்தகைய செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். இந்து தெய்வங்களை மற்றும் சமயங்களை இழித்து பழித்து பேசி மதமாற்றத்திற்கு அவர்கள் வித்திடுகிறார்கள். நக்சல்கள் கூடி அமெரிக்காவில் நடைபெற்ற பெட்னா மாநாட்டில் இந்தியாவில் இருந்து பங்கேற்றவர்களை இந்திய அரசு கண்காணிக்க வேண்டும். சமய உணர்வுகளை புண்படுத்தக்கூடிய வகையில் நடைபெறும் நிகழ்வுகளை அரசு தடை செய்ய வேண்டும்.
சிதம்பரம் கோவில் நிர்வாகத்தை, கோவில் மடங்களை கைப்பற்ற வேண்டும், மதுரை ஆதீனத்தை கலங்கப்படுத்துவது இது போன்ற செயல்களை திமுக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்கிறது. வீரமணிக்கு பயந்து அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ளார். 2000 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்களை மீட்டதாக கூறும் சேகர்பாபு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கட்டும், நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் பல இடங்களில் கோவில் சொத்துக்கள் மீட்கப்படவில்லை. தமிழகத்தில் பல இடங்களில் அமைச்சர் சேகர்பாபு செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளது.

அதை தவிர்த்து பக்தர்கள் பூசாரிகள் கோவில் நிர்வாகத்தினர் புண்படும் வகையில் செய்து கொண்டிருக்க வேண்டாம். இந்து சமய உள் விவகாரங்கள், சாஸ்திரம், சம்பிரதாயங்களில் அரசியல் படுத்தாமல் இருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி. மதத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளுடன் இணைந்து மதவாத அரசியலை செய்வது திமுக தான் என குற்றம் சாட்டினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO







Comments