Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் தொடங்கிய புத்தக திருவிழா – 160 புத்தக அரங்கு, 150க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களின் புத்தகங்கள்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் இன்று 16 ஆம் தேதி முதல் வரும் 25 ஆம் தேதி திருச்சி புத்தக திருவிழா என்கிற பெயரில் புத்தக கண்காட்சி தொடங்கியது. அந்த “திருச்சி புத்தகத் திருவிழாவினை” நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் ரிப்பன் வெட்டி கண்காட்சியை திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், சௌந்தரபாண்டியன், அப்துல் சமத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…… அறிவுசார் உலகை அமைக்க வேண்டும் என்கிற கருத்தை கொண்டது தான் திராவிட மாடல். அதுக்காக தான் இது போன்ற புத்தக திருவிழா. அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்த வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. நாம் புத்தகத்தை படிக்கும் பழக்கத்தை உருவாக்கி கொள்ள வேண்டும். புத்தக திருவிழாவிற்கு குடும்பம் குடும்பமாக வர வேண்டும். படிப்பு என்பது முக்கியம் தான் அதே போல புத்தகங்கள் வாசிப்பதும் முக்கியம் என்பதை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு…… அண்ணா எம்.ஏ படித்து முடித்த பிறகு பெரும்பாலான நாள்கள் அவர் கன்னிமாரா நூலகத்தில் தான் இருந்தார். புத்தகங்களை தொடர்ந்து படித்து கொண்டே இருந்தார். அதனால் தான் அவரை சொற்போரில் வெல்ல முடியாது. “தலைப்பு இல்லை” என்கிற தலைப்பில் பேச வேண்டும் என அண்ணாவிடம் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் கடைசி நேரத்தில் கூறிய போதும் 3 மணி நேரம் அண்ணா பேசினார். அண்ணா சிறப்பாக பேசியதற்கு காரணம் தொடர்ந்து நூல்கள் வாசித்தது தான்.
முதன் முறையாக அண்ணா பாராளுமன்றத்தில் பேசும் போது அவருக்கு 5 நிமிடங்கள் தான் ஒதுக்கப்பட்டது. அண்ணாவின் பேச்சை கேட்டு விட்டு பிரதமர் நேரு அவருக்கு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்றார். அதன் பின்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார். நான் திராவிட நிலப்பரப்பில் இருந்து வந்துள்ளேன் என பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாற்றினார். 

அண்ணாவிற்கு பிறகு வந்த கலைஞரால் உருவாக்கப்பட்டவர்கள் நாங்கள். ஒரு முறை பெரியார் குறித்து 540 பக்கம் எழுதப்பட்ட புத்தகத்திற்கு அணிந்துரை வேண்டும் என கேட்டார்கள். அதை 2 மணி நேரத்தில் படித்து முடித்து அணிந்துரை வழங்கினார் கலைஞர். நாங்கள் படிக்காமல் நிறைய அவமானம் பட்டுள்ளோம். அதனால் மாணவர்கள் அதிகம் படிக்க வேண்டும். திருச்சியை பெருமைமிக்கதாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் திருநெல்வேலிக்கு அடுத்தப்படியாக கல்வி நகரமாக திருச்சியை தான் கூறுவார்கள். மத்திய பல்கலைக்கழகத்தை திருவாரூக்கு ஒன்றும், திருச்சிக்கு ஒன்றும், கோவைக்கு ஒன்றும் கலைஞர் கொடுத்தார். ஆனால் அதனால் 10 பைசாவிற்கு போஜனம் இல்லை. இதில் தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை.

நம் மாணவர்கள் அங்குப்படிக்க முடியவில்லை. இனி மத்திய பல்கலைக்கழகங்கள் எல்லாம் நமக்கு தேவையில்லை மாநில பல்கலைக்கழகங்களிலேயே சிறப்பாக நாம் கல்வி கற்கலாம். திருச்சி மாநகராட்சி சென்னை மாநகராட்சியை போல் விரிவுப்படுத்தப்பட உள்ளது. மணப்பாறை அருகே உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை, புதிய கல்லூரிகள், தொழிற்சாலைகல் வர உள்ளது.

தமிழ்நாட்டை பல்வேறு வகையில் முன்னேற்ற பல திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். இன்னும் பத்தாண்டுகளில் திருச்சி மிகப்பெரிய வளர்ந்த மாவட்டமாக மாறி இருக்கும். மாணவர்கள் திருச்சிக்கும் உங்கள் இல்லத்துக்கும் பெருமை சேர்த்து தர வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலா எழுதிய திருச்சியின் வரலாறு குறித்து “ஊரும் வரலாறும்” என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது. திருச்சியில் இன்று தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் 160 புத்தக அரங்குகளுடன், 150க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வரப்பெற்றுள்ளது. அனைத்துப் புத்தகங்களுக்கும் விற்பனை விலையில் 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…    https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *