திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் அபாயகரமான ஆயுதங்களை காண்பித்து வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைளை எடுத்து வருகிறார்கள்.

கடந்த (24.04.2024)-ந் தேதி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எடத்தெரு அண்ணாசிலை அருகில் நடந்து சென்ற கூலி தொழிலாளியிடம் கத்தியை காண்பித்து பணத்தை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டு, விசாரணையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட பாலக்கரை கீழபுதூரை சேர்ந்த ரவுடி விஜய்பாபு (26), த.பெ. சௌந்தரராஜன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரவுடி விஜய்பாபு மீது பாலக்கரை காவல்நிலையத்தில் வழிப்பறி செய்ததாக 4 வழக்குகளும், கொள்ளையடிக்க திட்டமிட்டதாக 2 வழக்குகளும், கொலை மற்றும் கொலை முயற்சி என தலா ஒரு வழக்கும், காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உட்பட 13 வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருப்பது தெரிய வந்தது.

எனவே ரவுடி விஜய்பாபு என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க ஆணையிட்டார். அதனை தொடர்ந்து எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், திருச்சி மாநகரில் அபாயகரமான ஆயுத்தத்தை காண்பித்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments