மழைக்காலம் தொடங்கியிருக்கிறது . அனைவரும் கொண்டாடும் தீபாவளிக் பண்டிகை வர இருக்கிறது. அதே நேரத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் சளி, இருமல் மற்றும் காய்ச்சலும் வரத் தொடங்கிவிடும். மழைநீர் தேங்கி நிற்பதால், டெங்கு கொசு உற்பத்தியாகும். அதே நேரத்தில் தொற்று நோய் அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டாகி டெங்கு வைரஸ் காய்ச்சலை பரப்பக்கூடும்.

மேலும் தண்ணீர் சுத்தமில்லாமல் இருந்தாலும், அதன் வழியே டைபாய்டு, மஞ்சள் காமாலை, சிறுநீரக தொற்று, உணவு ஒவ்வாமையாலும் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. ப்ளூ என்று சொல்லக் கூடிய வைரஸ் காய்ச்சல் தான் மழைக்காலத்தில் அதிகம் வரும். குறைந்தது 3 முதல் 5 நாட்கள் சளி இருமல் தொண்டை கரகரப்பு காய்ச்சல் போன்றவை இருந்து விட்டுதான் போகும்.

குறிப்பாக குழந்தைகள், உடல் பலகீனமான நிலையில் இருப்பவர்கள், நாள்பட்ட நோய்களுக்கு மருந்தை உட்கொண்டு வாழ்பவர்கள் என அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது என எச்சரிகையுடன் பேச தொடங்குகிறார் திருச்சி மாவட்ட ஓய்வு பெற்ற மருத்துவ அலுவலர்(சித்தா பிரிவு) காமராஜ்….

லேசான இருமல் தொண்டை கரகரப்பு தும்மலில் ஆரம்பித்து பின்னர் காய்ச்சல் அதிகரிக்ககூடும். உடலில் இது போன்ற பிரச்சனைகள் வந்தால் உடனே மருந்து கடைகளுக்கு சென்று காய்ச்சலுக்கு ஒரு செட் மாத்திரை கொடுங்க என்று கேட்டு வாங்கி பயன் படுத்த கூடாது. எதனால் திடீரென்று காய்ச்சல் வந்தது? என்ன வகை காய்ச்சல்? என்று தெரிந்து மருத்துவர் ஆலோசனை பெற்று அதற்கேற்ப மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி இல்லாமல் சுயமாக மருந்தை வாங்கி ஓரிரு நாட்கள் சாப்பிட்டு பின் காய்ச்சல் குறையாத போது நோய் தீவிர நிலையில் மருத்துவ மனைக்கு செல்லும் போதுதான் நோய் தீர்க்கமுடியாமல் உயிரிழப்பு கூட ஏற்படக்கூடிய நிலை உருவாகிறது. எனவே இதைத் தவிர்க்க விரைவான மருத்துவ உதவி, விரைவான மருத்துவ பரிசோதனை மூலம்தான் நோயைத் தீர்க்க உதவும் என்பதை நினைவில் கொண்டு மாறுபட்ட குறிகுணங்கள், அறிகுறிகள் தோன்றிய உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பவர்

குடிப்பதற்கு காய்ச்சிய நீரைத் தான் அனைவரும் பருக வேண்டும், உணவை சமைத்து சூடு ஆறும் முன்பே உண்ண வேண்டும் என்றும் உணவில் அடிக்கடி தூதுவளை கீரை, சுக்கு, கண்டங்கத்தரி, கொள்ளு, பனங்கற்கண்டு, மஞ்சள் தூள், மிளகுத்தூள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் சிற்றரத்தை, துளசி அதிமதுரம்,திப்பிலி ஆகிய மூலிகைகள் சேர்ந்த பானங்களை ரசம் வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும்,

மழைநீர் வீட்டைச்சுற்றி தேங்காமல் கவனிக்க வேண்டும். தேங்கியிருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கொசுக்களை விரட்ட கொசுவர்த்தி பயன்படுத்தாமல் வேப்பிலை, துளசி, தும்பை நொச்சி இலைகளை புகைக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் நிலவேம்பு குடிநீர் கபசுர குடிநீர், வாதசுர குடிநீர், ஆடாதொடை குடிநீர், நொச்சி குடிநீர் ஆகியவற்றை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் வடமாவட்டங்களில் இயல்பான அல்லது அதிக மழையும், தென் மாவட்டங்களில் குறைவான மழையும், மத்திய மாவட்டங்களில் நல்ல மழையும் பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் மழையில் இருந்து மட்டுமல்ல நோயிடமிருந்து நம்மை காப்பாற்றி கொள்ளவும் எச்சரிகையுடன் இருப்போம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           125
125                           
 
 
 
 
 
 
 
 

 03 October, 2024
 03 October, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments