உங்க விஜய், ‘நா வாரேன்’, வாகை சூடும் வரலாறு திரும்புகிறது
“வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
2026 – தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்கிறார். இப்பயணத்தை இன்று (13.09.2025 சனிக்கிழமை) தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் தொடங்குகிறார்.
அவரது முதற்கட்ட சுற்றுப்பயணத்தை காலை 10:30 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பாக தொடங்குகிறார்.
இதற்காக விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார். பின்னர் விமான நிலையத்திலிருந்து பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ள திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் அலுவலகம், மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா வழியாக மரக்கடை எம்ஜிஆர் சிலையை வந்தடைகிறார்.
திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பாக வாகனத்தின் மேலே நின்றபடி அரை மணி நேரம் உரையாற்றுகிறார்.
அதற்கான பிரத்தேக வாகனம் சென்னையில் இருந்து திருச்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
திருச்சியில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காந்தி மார்க்கெட் தஞ்சாவூர் ரோடு, அரியமங்கலம் பழைய பால்பண்ணை வழியாக சிதம்பரம் புதிய தேசிய நெடுஞ்சாலையில் விஜய் அரியலூர் செல்கிறார்.
திருச்சி விமான முனையம், டி.வி.எஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், பாலக்கரை, எம்.ஜி.ஆர் சிலை ஆகிய பகுதிகளில் தவெக வினர் முளைப்பாரியுடனும், பூரண கும்பத்துடனும், தவெக கொடிகளுடனும், கொடியின் வண்ணத்திலான பலூன்களுடனும், விஜய் புகைப்படத்துடனான பதாகைகளை கைகளில் ஏந்தியும், விஜய்க்கு வரவேற்புக்கொடுக்கவுள்ளனர்.
விஜய் வருகையை முன்னிட்டு திருச்சி, அரியலூர் ,பெரம்பலூர் மாவட்டங்களில் விஜய்யை வரவேற்று ஆங்காங்கே பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒருசில இடங்களில் சாலைகளின் நடுவிலும், சாலைகளின் இருபுறமும், கட்சிக்கொடி தோரணங்களை கட்டியுள்ளனர்.
தொடக்கத்தில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரசாரம் மேற்கொள்ள தவெக வினர் அனுமதி கோரினர். ஆனால் மரக்கடை பகுதியில் ஓரிடத்தில் மட்டுமே பிரசாரம் செய்ய, நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.
தமிழக வெற்றி கழக தலைவர்
விஜய்யின் முதல் அரசியல் பிரச்சார பயணம் என்பதால், அவரது பேச்சை கேட்பதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து காணப்படுகிறது.
அந்தந்த மாவட்டங்களில் தவெக நிர்வாகிகள் அடங்கிய தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, தொகுதிவாரியாக மக்களின் பிரச்சனைகள் கேட்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விஜய் பிரச்சாரம் செய்வார் என தெரியவந்துள்ளது.
வார இறுதி நாள் என்பதால் இளைஞர்கள் மட்டுமல்லாமல் பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகளும் விஜய்யின் பேச்சை கேட்கவருவார்கள் என தெரிகிறது.
எம்ஜிஆர் சிலை முன்பாக விஜய் அரசியல் பிரச்சாரத்தில் 500 தொண்டர்கள் மட்டுமே பங்கேற்கேற்பார்கள் என உத்தரவாதம் கொடுத்து தவெக நிர்வாகிகள் பிரச்சாரத்திற்கு போலீஸாரின் அனுமதியை பெற்றுள்ளனர்.
அதிகபட்சம் 10 ஆயிரம் பேர் நிற்கக்கூடிய எம்ஜிஆர் சிலை அருகே சுமார் 30 ஆயிரம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் பயணிக்கும் திருச்சி விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், பாலக்கரை, அரியமங்கலம் பால்பண்ணை ஆகிய வழித்தடங்களில் அவரை காண்பதற்காக மேலும், 25 ஆயிரம் பேர் சாலையின் இருபுறமும் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் வருகையால் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒருபுறம் உற்சாகமடைந்துள்ளனர். மறுபுறம் பிரச்சாரப் பயணத்தின் போது ஏற்படும் விதி மீறல் தொடர்பாக யார் மீது வழக்குகள் பாயும் என்ற அச்சமும் காணப்படுகிறது.
இந்த சுற்றுப்பயணம் சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றிக்கு அச்சரமாக அமையும் என தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
விஜய் வருகையை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த இரண்டு நாட்களாக மூன்று மாவட்டங்களிலும் முகாமிட்டு முன்னேற்பாடு பணிகளை செய்துவந்தார்.
சட்டமன்ற தொகுதிகளான திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, மணப்பாறை ஆகிய 9 தொகுதிகளிலும் உள்ள தவெக நிர்வாகிகள் தலா 3000 கட்சித் தொண்டர்களை, திருச்சியில் நடைபெறும் விஜய் பிரச்சாரத்திற்கு அழைத்து வருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட் எம்.ஜி.ஆர் சிலை அருகே காலை 9:00 மணிக்கு முன்னதாக தொண்டர்களை அழைத்து வந்து இறக்கி விட்ட பின்னர், கிழக்கிலிருந்து (துவாக்குடி, திருவெறும்பூர், காட்டூர்)வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு திருச்சி ஜீ. கார்னர், அரியமங்கலம் பழைய பால்பண்ணை பின்புறமும், தெற்கு (வையம்பட்டி, மணப்பாறை) மற்றும் மேற்கிலிருந்து (வயலூர், அல்லித்துறை,முசிறி, தொட்டியம்) வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு உழவர் சந்தை மைதானமும், வடக்கிலிருந்து (சமயபும், மண்ணச்சநல்லூர், துறையூர்) வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு திருச்சி அண்ணா சிலை அருகே இரண்டு இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தாமதமாக வரும் வாகனங்கள் நேராக வாகன நிறுத்தும் இடத்திற்கு சென்றுவிட வேண்டும். அங்கிருந்து தலா சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தவெக தொண்டர்கள் நடந்து வந்து எம்ஜிஆர் சிலையை அடைய வேண்டும்.
திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் என்பதால், திருச்சி மாநகரில் உள்ள ஒருசில கல்வி நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துவிட்டன.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments