திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள காட்டுப்புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரி என போலி அடையாள அட்டை வைத்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை மிரட்டிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுப்புத்தூர் மேற்கு கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ், மற்றும் கிராம உதவியாளர் வெண்ணிலா ஆகியோர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, பெயர், விலாசம் தெரியாத நபர் ஒருவர் அனுமதியின்றி உள்ளே நுழைந்துள்ளார். அவர், “(Andi Corruption & Vigilance Council of India)” என அச்சிடப்பட்ட, அரசு முத்திரை இல்லாத அடையாள அட்டையை காண்பித்து, தான் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும், “உங்களை எல்லாம் கண்காணித்து வருகிறேன், பொதுமக்களிடம் நீங்கள் என்னென்ன வேலைகள் செய்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். உங்களை என்ன பண்றேன் பாருங்க” என்று மிரட்டியுள்ளார்.
அலுவலக உதவியாளர் வெண்ணிலாவையும் மிரட்டியுள்ளார். “நீ யார், எதற்காக இங்கு இருக்கிறாய்?” என்று கேட்டபோது, “என்னையே கேள்வி கேட்கிறாயா? உன் வேலையை காலி பண்ணிடுவேன்” என்றும் மிரட்டியுள்ளார். அவருடன் மேலும் இரண்டு நபர்களும் உடன் வந்துள்ளனர்.
அவர்களது பேச்சு மற்றும் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர், அடையாள அட்டையை மீண்டும் காண்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவர்கள் அதை காண்பிக்க மறுத்து தப்பிக்க முயன்றனர். பொதுமக்களின் உதவியுடன் அவர்களை சுற்றி வளைத்து, வலுக்கட்டாயமாக அடையாள அட்டையை வாங்கி பார்த்தபோது, அது அரசு முத்திரை இல்லாமல் போலி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ், காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று நபர்களையும் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அரசு அதிகாரி போல் நடித்து போலி அடையாள அட்டை வைத்திருந்தது திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள சித்தூர், வடக்கு தெருவை சேர்ந்த சசிகுமார் (43) என்பதும், அவருக்கு உதவியாக வந்தவர்கள் நாமக்கல் மாவட்டம், தூசூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கவின் மற்றும் N கொசவம்பட்டி, வ.உ.சி நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரவீன்குமார் என்பதும் தெரியவந்தது.
காட்டுப்புத்தூர் போலிஸார் இவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments