திருச்சிராப்பள்ளி மாவட்ட, மக்களின் அன்றாட தேவைகளில் அவசியமானதாக விளங்கும் உணவு மற்றும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திட திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள். கார வகைகள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதும் நமது கலாச்சாரமாக விளங்கி வருகிறது.
மேலும் தீபாவளி பண்டிகை காரணமாக இனிப்பு மற்றும் காரவகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிப்பு, காரவகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.
உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது.
மேலும் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தக் கூடாது. ஒரு முறைக்கு மேல் பயன்படுத்திய எண்ணெயை அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் வழங்கவேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விபரச் சீட்டு இடும்போது அதில், தயாரிப்பாளரின் முழுமுகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், பேட்ச் குறியீடு மற்றும் உரிமம், பதிவு எண் சைவ மற்றும் அசைவ குறியீடு குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத இடத்தில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திட வேண்டும். சுகாதாரமான சூழலில் பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன் கீழ் தங்களது வணிகத்தினை உரிமம் அல்லது பதிவு பெற்று கொள்ள வேண்டும். மேலும் நிரந்தர இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி வைத்திருப்பவர்கள் சுகாதார குறியீடு சான்றிதழ் (Hygiene Rating Certificate) பெற வேண்டும். விதிகளை மீறும்பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பொதுமக்களும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாங்கள் பலகாரங்கள், காரவகைகள் மற்றும் கேக் போன்ற உணவுப் பொருட்களை வாங்கும் போது உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை பற்றிய விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும்.
மேலும் உணவு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும், unavupukar@gmail.com. என்ற மின்னஞ்சல் மூலமும், புகார் அளிக்கலாம். மேலும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உணவு பாதுகாப்புத் துறையின் நுகர்வோர் குறை தீர்ப்பு செயலியை (TN Food safety consumer App (or) Food safety connect) பதிவிறக்கம் செய்தும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் உள்ள Consumer Grievances வழியாகவும் புகார் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments