திருச்சி, அக்டோபர் 26, 2025 – திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்துள்ள மேரா யுவா பாரத் (MY Bharat) அலுவலகத்துடன் இணைந்த இளைஞர் விடுதி (Youth Hostel) ஒன்று, கடந்த நான்கு ஆண்டுகளாகப் புழக்கமின்றி, புதர்கள் மண்டி கிடக்கும் அவல நிலையை, அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இன்று (26.10.2025) நேரில் ஆய்வு செய்துள்ளார்.

திருச்சி, காஜாமலை, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள, முன்னர் நேரு யுவா கேந்திரா எனப்பட்ட இந்த மையத்தை, இன்று காலை 10 மணியளவில் அவர் பார்வையிட்டார். ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு, இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் சமூகப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இதனுடன் இணைந்த இளைஞர் விடுதி, 1996ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கல்வி, ஆராய்ச்சி மற்றும் விளையாட்டுக்காக திருச்சிக்கு வரும் ஏழை, எளிய மாணவர்களுக்கு குறைந்த செலவில் தங்கும் வசதியை அளித்து வந்தது.

ஆய்வின்போது, இந்த விடுதி கடந்த நான்கு ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர், கழிவு நீர் வெளியேற்றம் உள்ளிட்ட அடிப்படைப் பராமரிப்புகள் கூட செய்யப்படாததால், பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டு, முற்றிலும் சீரழிந்து கிடப்பது தெரியவந்துள்ளது.
மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே புனரமைப்புக்காக நிதி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டும், அதன்பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், திருச்சியின் கல்வி மற்றும் விளையாட்டுச் சூழலை மேம்படுத்த உதவும் ஓர் அத்தியாவசியக் கட்டமைப்பு வீணாகி வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வேதனை தெரிவித்தார்.

இவ்விடுதியை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதே தனது இலக்கு எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளார்.
முதற்கட்டமாக, மத்திய பொதுப்பணித்துறை (Central PWD) அதிகாரிகளிடம், இளைஞர் விடுதியை புனரமைப்பதற்குத் தேவையான புதிய நிதி மதிப்பீட்டை உடனடியாகத் தயாரித்து வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மதிப்பீடு கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து, திருச்சி இளைஞர் விடுதியை மீட்டெடுப்பதற்கான கோரிக்கையை உறுதியுடன் முன்வைத்து, அதற்கான நிதியைப் பெற்று விடுதியை உயிர்ப்பிக்கப் பாடுபடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இளைஞர்களின் கல்வி மற்றும் விளையாட்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான இந்த இளைஞர் விடுதி விரைவில் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments