சமீபகாலமாக வெளிநாடுகளில் வேலை மற்றும் படிப்பு வாய்ப்புகளை நாடிச் செல்லும் இளைஞர்கள் பலரும், போலியான வேலைவாய்ப்பு அறிவிப்புகளால் மாட்டிக்கொண்டு பெரும் பிரச்சினைகளில் சிக்கி வருகிறார்கள். குறிப்பாக கம்போடியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் BPO (Business Process Outsourcing) வேலைகள் என்கிற பெயரில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அங்கு சென்றபின், அவர்களை மோசடி குழுக்கள் கடத்தி, சைபர் திருட்டு மற்றும் சட்டவிரோத இணைய குற்றச் செயல்களில் ஈடுபட வைக்கின்றனர். இது குறித்து BBC இல் april 2024 அன்று வந்த ஒரு கட்டுரையில் கிட்டத்தட்ட 5000 இந்தியர்கள் கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இதுபோல போலி வேலைவாய்ப்புகள் பெயரில் சிக்கி உள்ளனர் என்று தெரிவிக்கிறது.
இந்த வகையான போலி வேலைவாய்ப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் (Ministry of External Affairs) தானாகவே பாதுகாப்பான நாடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் (safe countries and safe agencies) பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ரஷ்யா, மியான்மார்,தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவது — கடந்த மாதம் 11.10.2025 அன்று, மூன்று தமிழ்நாடு இளைஞர்கள் சி*******ர், ந******ர் மற்றும் ம******ஜ் (பாதுகாப்பு கருதி பெயர்கள் தவிர்க்கப்படுகிறது), கம்போடியாவில் வேலை வாய்ப்பு என்று கூறி ஏமாற்றப்பட்டு, தாய்லாந்து வழியாக மியான்மாருக்கு கடத்தப்பட்டு, தற்போது அங்கு சட்டவிரோத சைபர் குற்றச்செயலில் ஈடுபட வைக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து நான் தனிப்பட்ட முறையில் வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் பேசியுள்ளேன். அவர்கள் இதை மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்டு, மியான்மார் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு இந்த மூன்று இளைஞர்களையும் மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என உறுதியளித்துள்ளனர்.
இதேபோல், நம்முடன் இன்று இருக்கிறார் திரு. கிஷோர் சரவணனின் பெற்றோர். இவர் ரஷ்யாவில் படிப்பதற்காக சென்றவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ரஷ்யா–உக்ரைன் போர் நடக்கும் நிலையில் அங்கேயே சிக்கிக்கொண்டார். இந்த விவகாரத்தை நான் பாராளுமன்றத்தில் பலமுறை எழுப்பி, பின் 68 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று பிரதமர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் ரஷ்ய தூதர் அவர்களையும் பலமுறை சந்தித்து எடுத்துரைத்தேன்.
இப்போது தொடர்ந்து எடுத்த முயற்சிகளின் பலனாக, அந்த இளைஞர் ரஷ்ய இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு பிறகு போர்க்களத்திலிருந்து திரும்ப அழைக்கப்பட்டு, தற்போது ரஷ்யாவின் பாக்முத் பகுதியில் உள்ள முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.
நான் இதை இங்கே உறுதியாகச் சொல்கிறேன் — அந்த இளைஞர் இந்தியாவுக்கு திரும்பி வரும் வரை என் முயற்சி நிற்காது.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் நோக்கம் — இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் போகும் முன், அரசாங்கம் வெளியிட்ட பாதுகாப்பான நாடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் பட்டியலை சரிபார்க்க வேண்டும்.
ரஷ்யா, மியான்மார், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் படிப்பதற்கும் அல்லது வேலைவாய்ப்புகளுக்கும் தற்போதைய நிலையில் செல்லக்கூடாது, ஏனெனில் அவை பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இல்லை.
இது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல — இது நம் இளைஞர்களின் உயிர் மற்றும் எதிர்காலம் குறித்தது. நமது நாட்டின் ஒவ்வொரு பெற்றோரும், மாணவரும் இதை புரிந்துகொண்டு, எந்த விதமான போலி வேலைவாய்ப்புகளிலும் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments