காவிரிக்கரையில் அமைந்த திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்றும், இது பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியின் ஓர் அறிவுக் களஞ்சியமாக அமைந்திடும் என்றும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 27.6.2024 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (21.3.2025) அன்று தலைமைச் செயலகத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாநகரில் 1,97,337 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் கட்டப்படவுள்ள மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

இந்நூலகத்தின் தரைத் தளத்தில் வரவேற்பறை, தகவல் வழங்கும் மற்றும் பதிவு செய்யும் பகுதி, பொருட்கள் வைக்கும் பகுதி, முக்கிய பிரமுகர் அறை, சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி. பருவ இதழ்கள் / பத்திரிகைகள் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, காத்திருப்போர் பகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி மற்றும் 1000 இருக்கைகள் கொண்ட கலையரங்கம் உள்ளிட்ட வசதிகளுடனும் முதல் தளத்தில் அறிவியல் மையம், சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி. நிகழ்ச்சிகள் நடத்தும் அரங்கம், குழந்தைகளுக்கான திரையரங்கம், குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் படப்புத்தகங்கள் பகுதி ஆகிய வசதிகளுடனும்,

இரண்டாம் தளத்தில் கலைஞர் பகுதி, ஆராய்ச்சி மையம், பயிலரங்கம் மற்றும் பல்நோக்குக் கூடம் ஆகிய வசதிகளுடனும், மூன்றாம் தளத்தில் தமிழ் நூலக குறிப்பு பகுதி, தமிழ் நூலகம் படைப்பாளர் பகுதி, தமிழ் நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி ஆகிய வசதிகளுடனும், நான்காம் தளத்தில் ரோபாட்டிக்ஸ் மற்றும் விளையாட்டுப் பகுதி, இணைய (டிஜிட்டல்) நூலகம் மற்றும் ஆங்கில நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி எனவும், ஐந்தாம் தளத்தில் அறிவுசார் மையம், செயற்கை

நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் மற்றும் ஆங்கில நூலக குறிப்பு பகுதி உள்ளிட்ட வசதிகளுடனும், ஆறாம் தளத்தில் நூல்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அறை, பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி, அரிய நூல்களுக்கான பகுதி. டிஜிட்டல் மயமாக்கல் பகுதி, டிஜிட்டல் ஸ்டுடியோ, போட்டித் தேர்வு பகுதி மற்றும் கருத்தரங்கு கூடம் உள்ளிட்ட வசதிகளுடனும், ஏழாம் தளத்தில் காணொலி (வீடியோ கான்பரன்சிங்) காட்சியரங்கம், தலைமை நூலக அலுவலர் அறை, துணை தலைமை நூலக அலுவலர் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, நிர்வாகப் பகுதி ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

மேலும், நகரும் படிகட்டுகள், 2 கண்ணாடி மின் தூக்கிகள், 7 மின் தூக்கிகள், தியணைப்பு வசதிகள், அனைத்து தளங்களிலும் குளிர்சாதன வசதி, மீன் ஆக்கிகள், மின்மாற்றிகள். சூரிய மின்கலங்கள், 100 நான்கு சக்கர வாகனம் 150 இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் போன்ற பல வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்.இ.ஆ., அவர்கள் இன்று (02.12.2025) நேரில் பார்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு
பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
இவ்வாய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.சேஷத்ரமயும் திபிசானு,இ.ஆ. அவர்கள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் திருமதி. அன்பரசி (கட்டிடங்கள்), திரு.கண்ணன் (மின்சாரம்) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அரசுதுறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments