Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

100 நாள் வேலை திட்டம் நீக்கம்: திருச்சியில் துரை வைகோ கண்டன உரை

இன்று (24.12.2025) காலை 10:30 மணியளவில், “100 நாள் வேலை – இனி இல்லை” என்ற தலைப்பில் திருச்சி மாநகரில் நடைபெற்ற திமுக தலைமையில் தோழமை இயக்கங்கள் பங்கேற்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைப்பெற்ற மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு என் கண்டன உரை ஆற்றினேன்.

கிராமத்தின் ஏழைகளுக்கு வாழ்வாதாரமாய் விளங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு பதிலாக VB G-RAM-G என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தும் ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு குறிப்பாக, பெண்களுக்கு, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது இந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்.

இத்திட்டம் 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது.

கொரோனா காலத்தில் எளிய மக்களின் வாழ்வாதாரம் தலைகீழாக மாறியபொழுது, மூன்று வேளை உணவு கிடைப்பதே கேள்விக்குறியானபொழுது, கிராமப்புற ஏழைளின் சுவாசக்காற்றாக விளங்கியது இந்தத் திட்டம்.

இத்திட்டம் இந்தியாவின் முற்போக்கு திட்டங்களில் ஒன்று என்றும், வறுமையை ஒழிப்பதில் உலகத்திற்கு சிறந்த பாடமாக விளங்குகிறது என்றும்,  இந்தியாவில் நிலவும் சமத்துவமின்மையை குறைக்க மிகவும் பயன்படும் திட்டம் என்றும், இந்த திட்டத்தை வானலாவ புகழ்ந்தவர், 2001 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞரான ஜோசெஃப் ஈ. ஸ்டிக்லிட்ஸ் (Joseph E. Stiglitz) ஆவார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை அகற்றுவது ஒரு வரலாற்றுப் பிழை என்று ஜோசெஃப் ஈ. ஸ்டிக்லிட்ஸ் (Joseph E. Stiglitz)  போன்ற உலக பொருளாதார வல்லுனர்கள் ஒன்றிய பாஜக அரசை எச்சரித்துள்ளனர்.

இத்திட்டத்திற்கு போதிய நிதியை வழங்காததின் மூலம் எதிர்காலத்தில் இத்திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு முடக்கும் என்பதை கடந்த சில வருடங்களாகவே நான் எச்சரித்து வந்தேன்.

கிராமப்புற ஏழைகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் இந்தத் திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இதே திருச்சி மாநகரில் எனது தலைமையில் 2023 நவம்பர் 5 ஆம் தேதி மறுமலர்ச்சி திமுக ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்திக்காட்டியது என்பதை இங்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

நாடு முழுவதும் 16 கோடி தொழிலாளர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். அனைத்து தொழிலாளர்களுக்கும் 100 நாட்களும் வேலை வழங்க வேண்டும் எனில், ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் ஒன்றிய பாஜக அரசு கடந்த 2024-25 ஆம் நிதி ஆண்டில் வெறும் 86 கோடி ரூபாய் நிதியை மட்டுமே ஒதுக்கியது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் மதிப்பிட்டால் இந்த 100 நாள் வேலைத்திட்டத்திற்கு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு கடந்த 11 வருடங்களில் பாதிக்கு மேல் குறைந்து விட்டதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

இந்த நிதி குறைப்பால் பெரும்பாலான கிராமங்களில் 40 முதல் 50 நாட்கள் கூட வேலை கிடைப்பதில்லை. நமது தமிழ்நாட்டில், கன்னியாகுமரி முதல் சென்னை வரை பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் நான் பயணித்த போது, அங்குள்ள ஏழைத் தாய்மார்கள், “ஐயா… இது வானம் பார்த்த பூமி; இங்கு விவசாய வேலை வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு மாதங்கள் தான் கிடைக்கின்றன. இங்கு வேறு எந்த தொழிற்சாலைகளும் கிடையாது; ஏனைய மாதங்களில் இந்த நூறு நாள் வேலை திட்டத்தை நம்பி தான் நாங்கள் இருக்கின்றோம். 11 வருடத்திற்கு முன்பு 80 முதல் 90 நாட்கள் வேலை கிடைத்தது, ஆனால் இப்பொழுது 40 முதல் 50 நாட்கள் கூட கிடைப்பதில்லை. முன்பு போல குறைந்தபட்சம் 90 நாட்களாவது வேலை கிடைப்பதற்கு வழி செய்யுங்கள்” – என்று கிராமத்து ஏழை தாய்மார்கள் கண்ணீர் மல்க என்னிடம் கூறினர்.

இந்தத் திட்டம் ஒன்றிய அரசு சார்ந்த திட்டம். நமது தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி ஸ்டாலின், தலைவர் வைகோ உள்ளிட்டவர்கள் இந்த 100 நாள் வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தரும்படி ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து நானும் இதற்கு குரல் கொடுத்து வருகிறேன் என்று அந்த ஏழை தாய்மார்களிடம் ஆறுதல் கூறினேன்.

தமிழ்நாட்டின் ஏழை தாய்மார்களின் கண்ணீர் குரலாக எனது கருத்துக்களை நான் இங்கு, இந்த மக்கள் மன்றத்தின் முன்பாக முன்வைக்கின்றேன்.

100 நாட்கள் வேலை உறுதித் திட்டம் என்று திட்டத்திற்கு பெயர் இருந்தும் 50 நாட்கள் கூட வேலை அளிக்க முடியாத போது, எப்படி இந்த புதிய திட்டத்தின்படி 125 நாட்கள் வேலை வழங்கப் போகிறது ஒன்றிய பாஜக அரசு.

இல்லாத ஊருக்கு வழி சொல்வது போல, போலி வாக்குறுதி அளிக்கும் போலியான திட்டம்தான் இந்த புதிய VB G-RAM-G திட்டம். இந்த புதிய திட்டத்தின் படி 100 நாட்கள் வேலை உறுதித் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி பகிர்வை குறைத்துவிட்டது. பணியாளர்களின் ஊதியத்திற்கான நிதியில் மாநிலத்தின் பங்களிப்பு பூஜ்ஜியத்திலிருந்து 40 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. பொருட்செலவிற்கு 25 லிருந்து 40 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே நம் தமிழ்நாடு போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதியை ஒன்றிய அரசு வழங்குவதில்லை. ஏற்கனவே நிதிச் சுமையால் திண்டாடும் தமிழ்நாட்டிற்கு இந்த புதிய மசோதாவினால் கூடுதல் நிதிச்சுமை 4300 கோடி.

இதனால், இந்த புதிய வேலை உறுதித் திட்டம் செயல்படுத்துவதில் மாநில அரசுக்கு கூடுதல் சிரமங்கள் ஏற்படும்.

இந்த புதிய வேலை வாய்ப்பு திட்டத்திற்கு தேசப்பிதா காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு VB G-RAM-G என்று அழைக்கின்றார்கள்.

ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கும் இந்த 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட காந்தியடிகளின் பெயரை பொருத்தமாக வைத்தார்கள்.

“கடவுள் விண்ணிலுமில்லை, மண்ணிலுமில்லை.  உள்ளத்தில்தான் இருக்கிறார். அவரை, மக்களுக்குச் செய்யும் சேவை மூலம் அறிய விரும்புகிறேன்.”

–  என்று கூறிய மகாத்மாவின் பெயரை விடவா சிறந்த பெயர், இந்த VB G-RAM-G?

ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கும் இத்திட்டத்தின் பெயரில் மகாத்மாவை அகற்றிவிட்டதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

இந்த அரசுக்கு கொலைகாரன் கொடியவன் கோட்சேவின் பெயரைக் கேட்டால் இனிக்கிறது என்றால், அவனால் சுட்டுக்கொல்லப்பட்ட மகாத்மாவின் பெயரை கேட்டால் கசக்கத்தானே செய்யும்.
வெட்கக்கேடு! வெட்கக்கேடு!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் இந்த புதிய திட்டத்தை ஜனநாயகத்திற்கு எதிரான இந்த புதிய திட்டத்தை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான இந்த VB G-RAM-G திட்டத்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான இந்த திட்டத்தை நான் வன்மையாக எதிர்க்கின்றேன். வன்மையாக கண்டிக்கிறேன்.

எங்களுக்குத் தேவை வளர்ச்சித் திட்டங்கள்; ஏழைகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் திட்டங்கள்!

எங்களுக்குத் தேவை இந்த திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றிட உதவும் உரிய நிதி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டிற்கு தேவை வளர்ச்சி அரசியல்: வன்முறை அரசியல் அல்ல!

தமிழர்களுக்கு தேவை சமத்துவ அரசியல்; சனாதன அரசியல் அல்ல! என்று உரையாற்றினேன்.

என் உரையின் இறுதியில், இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்துகொண்டுள்ள தாய்மார்களைப் பார்த்துச் சொன்னேன், “இந்த ஆர்ப்பாட்டம் உங்களுக்கானது, உங்களைப்போன்று இந்தியாவில் உள்ள அனைத்து மகளிருக்குமானது” என்று, அதை ஏற்று ஆமோதிப்பதாக கைகளைத்தட்டி வரவேற்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை இதே பெயரில் தொடர வலியுறுத்தியும், போலி VB G-RAM-G திட்டத்தை திரும்பப்பெறவும் கோரிக்கை வைத்து என் உரையை நிறைவுசெய்தேன்.

இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடெங்கும் ஏற்பாடு செய்த முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களுக்கும், இந்த கூட்டத்தை இங்கு ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் அன்பு சகோதரர் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழமை கட்சி நிர்வாகிகளுக்கும், தோழர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *