Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

“உங்க கனவ சொல்லுங்க” திட்டம்: திருச்சியில் தன்னார்வலர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருவள்ளுர் மாவட்டத்தில் இன்று (09.01.2026) நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு அரசின் “உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஐமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு கைபேசி இணைப்பு, விண்ணப்பப் படிவம், அடையாள அட்டை, தொப்பி மற்றும் கனவு அட்டைகளை வழங்கி சிறப்பான முறையில் இப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள்.

தமிழ்நாடு அரசு மே 2021 முதல் இதுவரை, தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்கள் வரை பயன்பெறும் வகையில் பல்வேறு சமூக நலத் திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கி வருகிறது.

நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த மக்களின் தேவைகளான பட்டா மாறுதல், சாதி சான்றிதழ், வருவாய்த் துறை சான்றிதழ்கள், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு அதற்கான பெயர் மாற்றங்கள், சாலை வசதிகள், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம், திறன் மேம்பாட்டிற்கான “நான் முதல்வன்” திட்டம், முதியோர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், “நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம், முதியோர்களுக்கான அன்புச்சோலை திட்டம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” போன்ற பல்வேறு திட்டங்களை இவ்வரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தினை செயல்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு இத்திட்டத்தினை இன்று தொடங்கி வைத்துள்ளார்கள்.

“உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை தன்னார்வலர்களை ஈடுபடுத்தி கண்டறிய எடுக்கப்படும் முன் மாதிரி முயற்சியாகும். இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிக்காக மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இப்பணிகளை மேற்கொள்ள உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

தன்னார்வலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர்/உறுப்பினரிடம் வழங்குவர். அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர்.

தன்னார்வலர்கள், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றிய பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர்.

அதன் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 5,12,539 குடும்பங்கள், நகர்ப்புர பகுதிகளில் 2,03,875 குடும்பங்கள் ஆக மொத்தம் 7,16,414 குடும்பங்களுக்கு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனை ஊரகப்பகுதிகளைச் சார்ந்த 812 நியாயவிலைக் கடைகளுக்கு 1025 தன்னார்வலர்கள், 400 ஊரக மேற்பார்வையாளர்கள் மற்றும் நகர்ப்புரப் பகுதிகளைச் சார்ந்த 402 நியாயவிலைக் கடைகளுக்கு 408 தன்னார்வலர்கள், 176 நகர்ப்புர மேற்பார்வையாளர்கள் ஆக மொத்தம் 1214 நியாயவிலைக் கடைகளுக்கு 1433 தன்னார்வலர்கள் மற்றும் 576 மேற்பார்வையாளர்களைக் கொண்டு கணக்கெடுப்புகள் துவங்கப்படவுள்ளது. கணக்கெடுப்பு பணியானது 10.01.2026 முதல் 31.01.2026 வரை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள், மேயர் மு.அன்பழகன் அவர்கள், மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி (எ) கவிஞர் சல்மா அவர்கள், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.செளந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, மண்டலத்தலைவர் மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கங்காதாரிணி, மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *