உர விலை உயர்வு; ஒன்றிய அரசை கண்டித்து திருச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.ஓன்றிய அரசின் உர விலை உயர்வை ரத்து செய்யக் கோரியும், மாநில அரசு கூட்டுறவுப் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்டக் குழுக்கள் சார்பில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டு, ஒன்றிய அரசுக்கு எதிராகக் கண்டமுழக்கங்களைஎழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் அயிலை சிவசூரியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஒன்றிய மோடி அரசு, சமீபத்தில் உரங்களின் விலையை ஏறத்தாழ 25% முதல் 50% வரை உயர்த்தியுள்ளது. இது இந்திய விவசாயத்தைக் கடுமையாகப் பாதிக்கும். விலை உயர்வு குறித்துக் கேட்டால், வளைகுடா பகுதி போர்தான் காரணம் என்று சாக்கு போக்கு சொல்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு

₹.25 லட்சம் கோடிக்கும் மேல் கடன் தள்ளுபடி செய்து சலுகை வழங்கும் மோடி அரசு, கோடிக்கணக்கான விவசாயிகள் பயன்படுத்தும் உரத்திற்கு கூடுதல் மானியம் வழங்கி, விலை உயர்வை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக உர விலையை உயர்த்தி, விவசாயிகளை விவசாயத்தை விட்டே அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அரசு, ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகத் தேர்தல் பிரசாரத்தில், தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். பெரிய விவசாயிகளின் கடன்கள் 50% தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்துதான் ஆட்சிக்கு வந்தது.
நாங்களும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தற்போது அரசு அறிவித்துள்ள சலுகை என்பது எந்த விதத்திலும் போதுமானதாக இல்லை. அழுகிற பிள்ளைக்கு விரலில் தேனைத் தடவி வைப்பது போலத்தான் இந்தத் தள்ளுபடி சலுகை அறிவிப்பு அமைந்துள்ளது.

எனவே, தமிழக விஜய் அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிப்படி, சிறு-குறு விவசாயிகளின் கடன்களை முழுமையாகவும், பெரு விவசாயிகளின் கடன்களில் 50 சதவீதத்தையும் தள்ளுபடி செய்ய முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார். பேட்டி: அயிலை சிவசூரியன், பொருளாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments