திருச்சி மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், துணை மேயர் திவ்யா மற்றும் மாநகராட்சி ஆணையர் வீரபிரதாப்சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் இணைந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சாதாரண கூட்டத்தில், மண்டல அளவிலான குறைபாடுகள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் காரசாரமாக விவாதித்தனர்.

கூட்டத்தின் போது பேசிய மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம், தனது பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு உதவி ஆணையர்கள் மூலம் திடீரென நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.
அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சுமார் ₹40 லட்சம் வரை வைப்புத்தொகையாக (Deposit) கட்ட வேண்டும் என்று அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இது மேயரின் கவனத்திற்கு வந்துதான் நடக்குகிறதா?” என முத்துச்செல்வம் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து நோட்டீஸில் உள்ள வாசகங்களை சுட்டிக்காட்டி பேசிய அவர், “18 குடும்பங்களுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு பெற்றுவிட்டு, அதை 40 குடும்பங்கள் பயன்படுத்துவதாக நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால், அந்த மக்கள் குடிநீரை திருடி குடிக்கிறார்கள் என்று மாநகராட்சி குற்றம் சாட்டுகிறதா? இது பொதுமக்களை அச்சுறுத்தும் தோரணையில் உள்ளது” எனக் கடுமையாகச் சாடினார்.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் மேயரின் இருக்கைக்கு முன்பாக சென்று அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக திமுக மாமன்ற உறுப்பினர்களான லீலாவேலு, காஜாமலை விஜய் மற்றும் புஷ்பராஜ் ஆகியோரும் மேயர் இருக்கை முன் சென்று போராட்டத்தில் இணைந்தனர்.

“மேயருக்குத் தெரியாமல் எப்படி இவ்வளவு பெரிய தொகை கோரும் நோட்டீஸ் வெளியிடப்பட்டது? இது மேயர் பதவிக்கு விளைவிக்கப்பட்ட அவமானம்” என்று காஜாமலை விஜய் ஆவேசமாகத் தெரிவித்தார்.
மாமன்ற உறுப்பினர்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து விளக்கமளித்த உதவி ஆணையர், “அரசின் தற்போதைய புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளின் அடிப்படையிலேயே இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

இருப்பினும், மக்கள் நலனுக்கும் மாமன்றத்தின் கண்ணியத்திற்கும் எதிராக இதுபோன்ற நோட்டீஸ்கள் வழங்கப்படுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்த மேயர் அன்பழகன், “அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்” என அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார். மேயரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube



Comments