அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் தில்லைநகர் கோகினூர் சிக்னல் அருகே சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லாண்டு காலமாக நீடித்து வந்த பாபர் மஸ்ஜித் பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பர் மாதம் 5 ம் தேதி தீர்ப்பளித்தது. தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ரூபாய் 300 கோடி செலவில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தவகையில் திருச்சி கோகினூர் சந்திப்பில் உள்ள சிக்னலில் தமுமுகவினர் சாலைகளை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பிவைத்தனர்.
போராட்டம் குறித்து பேசிய தமுமுக அமைப்பின் நிர்வாகி…”அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஊரடங்கு நேரத்தில் பூமி பூஜை விழா நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம். ஒரு நாட்டின் பிரதமர் அனைவருக்கும் பொதுவானவர் ஒருசாரார் கட்டும் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வது சரியானதல்ல” என்றனர்.
போராட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாத வகையில் காவல் துணை ஆணையர் பவன்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
Comments