புதுக்கோட்டை மாவட்டம் நாசரேத் பகுதியில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் நிக்கோலஸ். தனக்கு காய்ச்சல் காரணமாக திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றம் பின்புறம் உள்ள கெம்ஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 13ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே ஒரு லட்ச ரூபாய் சிகிச்சைக்காக பணம் கட்டிய நிலையில் மறுநாள் காய்ச்சல் சரியானது. உடனடியாக என்னை வேறு மருத்துவமனைக்கு மாற்றி விடுங்கள் என்னிடம் வேறு ஏதும் பணம் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகத்திடமும், மருத்துவரிடமும் தெரிவித்து இருந்தார்.
ஆனால் அவர்கள் உங்களை அனுப்ப முடியாது என்றும் மேலும் உங்களுக்கு மருத்துவச் செலவுகள் ஆகியுள்ளது எனவும் அவை அனைத்திற்கும் 1,50,000 ரூபாய் கட்ட வேண்டும் எனவும் மீண்டும் வற்புறுத்தினர்.
தன்னிடம் காப்பீடு இருப்பதாகவும் அந்த காப்பீட்டில் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் நிக்கோலஸ். அதற்கு அவர்கள் நீங்கள் பணத்தை கட்டிவிட்டு காப்பீடு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று மீண்டும் வாக்குவாதம் செய்தனர். இரண்டு மூன்று முறை அந்த மருத்துவமனையை விட்டு அவர் தப்பிக்க முயற்சி செய்தார்.
ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை வெளியே விட மறுத்து தடுத்தனர். தற்போது அவரால் பணம் கட்ட முடியாத நிலையில் தனது மொபைல் போனில் தனது நிலையை பதிவுசெய்து வாட்ஸ் அப்பில் அனுப்பி அது வைரலாகி வருகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து தனியார் மருத்துவமனை அவரிடம் பணம் கட்டச் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
பின்பு மாவட்ட ஆட்சியர் சிவராசு மருத்துவமனை நிர்வாகத்திடம் அவரிடம் வாங்கிய தொகைக்கு மேல் மறுபடியும் வாங்கக்கூடாது என எச்சரித்து அவரை மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
Comments