திருச்சி மாநகரில் நேற்று ஒரு மணி நேரம் பெய்த கனமழைக்கு கன்டோன்மென்ட், கே.கே.நகர், தென்னூர், அண்ணா நகர், சிங்காரத்தோப்பு, பீமநகர், உறையூர், கருமண்டபம் உள்ளிட்ட மாநகர் பகுதிகள் முழுவதும் மழை நீரில் மூழ்கி தத்தளித்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
குறிப்பாக இந்த பகுதிகளில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. மழை பெய்து தண்ணீர் வடியாமல் இருப்பதால் ஆங்காங்கே வெட்டப்பட்ட பெரிய பள்ளங்கள் தெரியாமல் இருசக்கர வாகனங்கள் சிக்கித் தவிப்பதும், வயதானவர்கள் அதில் வழுக்கி விழுந்து காயமடைவதும் தொடர் கதையாகிவிட்டது.

வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காத நேரத்திலேயே ஒரு மணி நேரம் பெய்த மழைக்கு திருச்சி மாநகர பகுதிகளில் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது போல் காட்சி அளிக்கிறது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு மழை பெய்தால் உடனடியாக மழைநீர் வடியும் அளவுக்கு சீர் செய்ய வேண்டும் என திருச்சி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஏர்போர்ட, கே.கே.நகர் பகுதிகளில் வீடுகளுக்குள்ளேயே மழை நீர் புகுந்தது. மேலும் மழைநீர் வடிந்து செல்லக்கூடிய வடிகால் வாய்க்கால்கள் அவற்றை முறையாக தூர் வாராமல் இருப்பதால் பெரும்பாலான பகுதிகள் மழை நீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து உள்ளது என்பது ஏற்கனவே சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. உடனடியாக மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn




            
            
            
            
            
            
            
            
            
            


Comments