கொரோனாவால் குழந்தை பருவத்தின் இன்பங்களை தொலைக்கும் சிறுவர்கள் - ஈடுகட்ட பெற்றோர்கள் என்ன செய்யலாம்?

கொரோனாவால் குழந்தை பருவத்தின் இன்பங்களை தொலைக்கும் சிறுவர்கள் - ஈடுகட்ட பெற்றோர்கள் என்ன செய்யலாம்?

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை.குழந்தைகளை ஆரோக்கியமாகவும் அறிவுள்ள குழந்தைகளாகவும் வளர்ப்பதற்கு  பெற்றோர்கள்  அவர்களுடைய வாழ்வில் சூழலோடு   இணைந்து செயல்படும் போது மகிழ்ச்சியான வாழ்வே குழந்தைகள் பெற முடிகிறது. 

பெரியவர்களுக்கு மன அழுத்தம் என்பது போல குழந்தைகளுக்கும் அவர்களுடைய சுற்றுசூழல் மாறுபாட்டால் வீட்டுக்குள்ளேயே இருப்பது  உளவியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை  உண்டாக்கும் 
 எனவே அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் அவர்களை எவ்வாறு இன்பமாக பார்த்துக்கொள்ளலாம் என்றும் பெற்றோர்களும், பெற்றோர் அமைப்பினரும் ,குழந்தை நல மருத்துவர்களும் கூறியுள்ள  ஆலோசனைகளை இங்கு காண்போம் .

லெமா தினேஷ்குமார்.
இல்லத்தரசி   

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் என்னுடைய  இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதில் சரியான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன், நாம் நமது நேரத்தைஅவர்களுக்கு  செலவழித்தாலே  அவர்களை நாம் இன்பமாக பார்த்துக்கொள்ளலாம்.

 குழந்தைகள் என்றால் பிடிவாதம் இல்லாமல் இருக்காது, ஆனால் அவர்களுக்கு எதில் விருப்பம் என்று முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
 பள்ளிகள் இல்லாத காலகட்டம் ஆதலால் அவர்களுக்கு படிப்பை ஒரு விளையாட்டு பாணியில் சொல்லிக் கொடுத்தால் இன்னும் மனதில் பதியச் செய்யும்,
 விடுமுறை தானே என்று இல்லாமல் குழந்தைகளுக்கு ஒரு கால அட்டவணை பின்பற்றினால் பழக்கவழக்கங்களிலும் மாறாமல் இன்னும் ஆக்கபூர்வமான குழந்தைகளாக அவர்களை மாற்றலாம் என்கிறார் லெமா தினேஷ்குமார்.

 எழில்வாணி,
திருச்சி பெற்றோர் சர்க்கிள் அமைப்பு 

குழந்தைகளைப் பொருத்தவரை  நாம் எவற்றை செய்கிறோமோ அதையே திரும்பச் செய்வார்கள் எனவே அவர்களோடு இணைந்த வாழ்வே நாம் வாழவேண்டும் அவர்கள் ஆடும் பொழுதும்  பாடும் பொழுதும் அவர்களோடு இணைந்து நாமும் செய்தால் அவர்கள் இன்னும் மகிழ்ச்சியாக வைக்க உதவும்.

 குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு யோகா பயிற்சி ,உடற்பயிற்சி தோப்புக்கரணம் போன்றவற்றை செய்ய வைக்கலாம். விளையாட்டிற்கு உபயோகப்படுத்தும்  விளையாட்டு பொருட்களில் கூட அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியாக பில்டிங் பிளாக்ஸ்,கிளே  போன்றவற்றை வாங்கி கொடுத்து அவற்றை அவர்கள் விருப்பப்படி விளையாட செய்வது அவர்களை புத்துணர்ச்சியாக வைக்க உதவும்.
 இணையதளத்திலேயே இப்பொழுது  பல்வேறு வகுப்புகள் நடத்திகொண்டிருக்கின்றன எனவே அவர்களுக்கு விருப்பமானவற்றை  இசை, பாடல் ,நடனம் இவ்வாறு கற்றுக் கொடுப்பதில் நாம் அவர்களை ஈடுபடுத்தலாம்.
 Trichy parents circle   அமைப்பு பெற்றோர்களிடையே விழிப்புணர்வை கொண்டு வருவதற்காக இந்த காலகட்டத்தில் இணையவழியில் அவர்களை ஒன்றிணைத்து  அவர்களுக்கான நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கிறோம் என்கிறார் எழில்வாணி.

யுவப்பிரியா
திருச்சி பெற்றோர் சர்க்கிள் அமைப்பு 

குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே வைத்திருப்பது என்பது சவாலான ஒரு செயல்தான்.
 வளரிளம் பருவத்தில் ஓடி ஆடி  விளையாட வேண்டிய குழந்தைகளை வீட்டிற்குள் வைப்பது அவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும்.
 வேறுவிதமான செயல்களில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எடுத்துக்காட்டாக தோட்டக்கலை, அவர்களையே  விதைகளை விதைக்க செய்தல் தண்ணீர் ஊற்ற செய்து அதற்கு பெயர் வைக்கச் சொல்லி இப்படி விளையாட்டு மூலமாக ஒவ்வொன்றாக வீட்டிற்குள்ளேயே அவர்களை புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாக வைக்க உதவலாம்.  

கார்த்திகேயன்
குழந்தைகள் நல மருத்துவர் 
திருச்சி அரசு மருத்துவமனை.


 
குழந்தைகளை இன்பமாக வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவர்களை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது மிக மிக அவசியமான ஒன்றாகும். 
பல பெற்றோர்கள் வைக்கும் முதல் குற்றச்சாட்டு குழந்தைகள் சரியாக உணவு உண்பதில்லை வெறும் பால் மட்டுமே குடிக்கிறார்கள் என்பது தான்.
பாலை மட்டும் அருந்திவிட்டு  விளையாட செய்வதால் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.

 அவர்களுக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகளை கண்டிப்பாக வழங்க வேண்டும், இரும்புச்சத்து உள்ள உணவுகளையும் அதிகமாக அளிக்கும் பொழுது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தானாக உண்டாகும். 
குழந்தைகளுக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று அவர்களே தேர்வு செய்யச் சொல்லவேண்டும் அவர்கள் பொம்மைகளில் கூட  பியானோ வாசிக்க வேண்டுமா? இல்லை, ட்ரம்ஸ் வாசிக்க வேண்டுமா என்பதை குழந்தைகள் தான் தீர்மானிக்க வேண்டும் நம்முடைய எவ்வித விருப்பங்களையும் குழந்தைகள் மீது திணிப்பது மிகப்பெரும் தவறாகும். 
குழந்தைகளுக்கு சரியான கால அட்டவணையை பின்பற்ற வேண்டும் சரியான நேரத்தில் தூங்க வைத்தல், உணவு உண்பது குறிப்பாக உணவு உண்ணும் பொழுது குழந்தைகளுக்கு தனியாக உணவு கொடுத்து விட்டு நாம் பின்னர் உண்பதைவிட நம்மோடு சேர்ந்து அவர்களையும் ஒருவேளை  உணவு உண்ண செய்தல் அவசியம்.அந்த அட்டவணையில் குழந்தைகளுக்கு உடற்பயிற்சியையும் செய்யவைத்தல் அவர்களின்  ஆரோக்கியத்திற்கும் உதவும் 
  குழந்தைகளுக்கு பழச்சாறு போன்றவற்றை கொடுப்பதை தவிர்த்தல்  நல்லது பொதுவாக நீர் ஆதாரங்களாக உள் செல்லும் உணவு வகைகள் அவர்களுக்கு தே தேவையான சத்துக்களை உண்டு செய்வதில்லை எனவே பழங்களை சாலட் போன்ற முறையில் அவர்களுக்கு விருப்பமான வகையில் வித்தியாசமாக  செய்து கொடுத்தால் விரும்பி உண்பர். 

செல்போன் டிவி போன்றவற்றை குழந்தைகள் பார்ப்பது தவிர்த்தல் நல்லது .ஏனெனில், இதனால் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இவற்றை தவிர்ப்பதற்காக குழந்தைகளுக்கு  கதை சொல்லுதல், படம் வரைய செய்தல்,  நடனம்,  பாட்டு  இல்லையென்றால் நம்மோடு வேலை செய்யும் பொழுது குழந்தைகளுக்கு காய்கறிகளின் பெயரை சொல்ல சொல்லுதல் இப்படி அவர்கள் நம்மோடு சேர்ந்து பயணிக்க செய்யும் பொழுது  நமது  பாதுகாப்பில் இருப்பதோடு அவர்கள் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பான உணர்வுடன் இருப்பர் என்கிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF