ஆள் பற்றாக்குறையால் 108 ஆம்புலன்ஸ்கள் சேவை கிடைப்பதில் தாமதம் - 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் இன்று 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு, மற்றும் செயற்குழு கூட்டம் அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தமிழகம் முழுவதுமிருந்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்ல் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
ஜிவிகே - இஎம்ஆர்ஐ நிறுவனமானது சட்ட விதிமுறைகளை கடைபிடிப்பது இல்லை என்றும், உயிரை பணயம் வைத்து கொரானா காலத்தில் பணியாற்றிய தொழிலாளர்களை காரணமின்றி பணிநீக்கம் செய்வதும், மறைமுக ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறித்து அரசுக்கு தெரிவித்தும் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. 108 தொழிலாளர்களின் உரிமை மற்றும் நலன் பாதுகாக்கப்பட நிலையான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் கடந்த 13 ஆண்டுகளாக தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வது, சட்ட விரோத செயற்பாடுகளில் ஜிவிகே -இஎம்ஆர்ஐ நிறுவனம் ஈடுபட்டு வருவதை கைவிட்டு தொழிலாளர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக மக்களின் வரிப்பணத்தில் செயல்பட்டுவரும் இந்த சேவை நிறுவனமானது பிரைவேட் பப்ளிக் ஒப்பந்த முறையில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் நிலையில் மாதந்தோறும் ஆட்குறைப்பு செய்வதும், பணியிடங்கள் நிரப்பபடுவதாக பொய்யான அறிவிப்பு வெளியிட்டு வருவதால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதுடன், அனுபவமிக்க ஊழியர்கள் பணி நீக்கத்தால் பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்படுகிறது.
இதனால் பல 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படாமல் இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்படுவதுடன், உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் சேவை மக்களுக்கு கிடைப்பதில்லை எனவும் குற்றம் சாட்டினர், தமிழக அரசு இதற்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 3 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உயிரிழந்த நிலையில் 2 பேருக்கு அரசு எந்தவித உதவியும் இதுவரையும் வழங்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் சேவை முறையில் இயங்கிவரும் இதனை ஒப்பந்த முறையில் தனியாருக்கு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது, இந்தியாவில் பல மாநிலங்களில் இதுபோன்ற முறை இருந்தாலும் மக்களுக்கான சேவை கிடைக்காத பட்சத்தில் தமிழகத்திலும் இதேநிலை ஏற்படும் என எச்சரித்தனர். 108 ஆம்புலன்சில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு கழிவறை மற்றும் உடை மாற்றும் வசதி ஏற்படுத்தித்தரவும் ஜிவிகே - இஎம்ஆர்ஐ நிறுவனம் முன்வரவில்லை, பெண் தொழிலாளர்களுக்கு பணி சூழலை உறுதி செய்யவும் அரசும், ஜிவிகே - இஎம்ஆர்ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn