தரமற்ற தார் சாலையால் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கும் அவல நிலை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மாநகராட்சி 39வது வார்டு காட்டூர் எல்லைக்குடி தலை கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்காமல் அதன் மீது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தரமற்ற முறையில் தார் சாலை அமைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அவ்வழியாக வரக்கூடிய வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி மாட்டிகொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சாலையில் ஏற்படும் பள்ளங்களால் அங்குள்ள நியாய விலை கடையில் பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் கடந்த ஒரு மாதகாலமாக வரவில்லை.
இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்நிலையில் அந்த சாலையில் சென்ற போர்வெல் வாகனம் மாட்டி சிக்கிக்கொண்டது. நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு கிரேன் உதவியுடன் போர்வெல் வண்டியானது மீட்கப்பட்டது.
பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களின் மண்ணை அதே இடத்தில் கொட்டி சீரமைக்காமல் அந்த மண்ணை வேறு பகுதிக்கு எடுத்துச் சென்று விட்டதால் பள்ளங்கள் முறையாக சீரமைக்கவில்லை. மேலும் அதன் மீது தரமற்ற தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் ஆளை விழுங்கும் அளவிற்கு சாலையில் பள்ளங்கள் ஏற்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அதிகாரிகள், அமைச்சர், கவுன்சிலர் உள்ளிட்ட அனைவரிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகமாக இருப்பதால் சம்பா சாகுபடிக்கு தயாராகிக் கொண்டிருக்க கூடிய சூழலில் விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்ல சரக்கு வாகனங்கள் உள்ளே வந்தால் சிக்கிக் கொள்ளும் அபாய நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தரமான தார்சாலை அமைத்து தரவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision