திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடம் - பணிகள் தீவிரம்
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் நெரிசலை தவிர்ப்பதற்காக, புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனைய கட்டிடம், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் உட்பட விமான போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கான விரிவாக்க பணிகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
தற்போதுள்ள பயணிகள் முனையம், உள்நாட்டு மற்றும் சர்வதேச போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பயன்பாடு அதிகரித்துள்ளதால், புதிய முனையம் ரூ.951.28 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த புதிய முனைய கட்டிடத்துக்கு பிரதமர் 2019ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதியன்று திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
இதில் பரபரப்பான நேரத்தில் 2,900 பயணிகளை கையாள முடியும். இங்கு 48 பரிசோதனை கவுன்டர்கள், விமானத்தில் ஏறுவதற்கான 10 பிரிட்ஜ்களும் அமைக்கப்படுகின்றன.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில், இந்த முனையம் சிறப்பான தொழில்நுட்ப அம்சங்களுடன் அமைக்கப்படவுள்ளது.
75,000 சதுர மீட்டர் பரப்பில் புதிய முனையத்தின் கட்டிடம் கம்பீரமான நவீன மேற்கூரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்புறத் தோற்றம் திருச்சி நகரின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
இங்கு வந்து செல்லும் விமான பயணிகள், திருச்சி நகரின் அடையாளத்தை உணரும் வகையில் இந்த முனையம் தனிச்சிறப்பான கட்டிடக்கலையுடன் உருவாக்கப்படுகிறது.
சிறிய மற்றும் பெரிய விமானங்களை நிறுத்துவதற்கான புதிய இடங்கள், உதவி உபகரணங்கள் அறைகள், டாக்சி நிறுத்தும் இடங்கள், கட்டுப்பாட்டு அறைகள், ரேடார் முனையம், இந்திய விமான நிலைய ஆணைய அலுவலகங்கள், வானிலை மைய அலுவலங்கள் ஆகியவையும் இந்த விரிவாக்கத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
கொரானா காலகட்டத்தில் கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும் தற்போது துரிதமாக பணிகள் நடைபெற்று வருகிறது
புதிய முனையம் 2022 மார்ச் மாதத்துக்குள் பணிகளும் முடிவடையும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.