கொள்முதல் குழு அமைப்பு - இடைத்தரகர்களையோ, இதர நபர்களையோ நம்ப வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

கொள்முதல் குழு அமைப்பு - இடைத்தரகர்களையோ, இதர நபர்களையோ நம்ப வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தைப் பொங்கல் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக் கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

 இதற்காக விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்திடும் வகையில் திருவளர்சோலை பகுதியில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளின் தோட்டத்திற்கு நேரடியாக சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், நேரில் பார்வையிட்டு கரும்பின் உயரம், தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவளர்சோலை பகுதியில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளின் தோட்டத்திற்கு நேரடியாக சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் கரும்பின் உயரம், தரம் ஆகியவற்றை பார்வையிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக பொங்கல் கரும்பு கொள்முதலை தொடங்கி வைத்தார். 

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது... தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழுக் கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 8.34,099 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழுக் கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்திடும் வகையில் வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கரும்பு கொள்முதல் தொடர்பான விவரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு, கொள்முதல் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். எனவே, கரும்பு கொள்முதல் தொடர்பாக இடைத்தரகர்களையோ, இதர நபர்களையோ நம்ப வேண்டாம் என விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வட்டார அளவில் கரும்பு கொள்முதல் குழு நியமிக்கப்பட்டுள்ளதால், அந்தந்த வட்டாரத்தில் பயிரிட்டுள்ள கரும்புகளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திட முன்னுரிமை அளிக்கப்பட்டதன் அடிப்படையில் கரும்புகள் கொள்முதல் செய்யும் பணியை இக்குழு மேற்கொள்ளவுள்ளது.

எனவே, விவசாயிகள் தங்களிடம் கொள்முதல் செய்யவரும் அலுவலர்கள் குறித்த முழுமையான விவரம் மற்றும் எந்த கூட்டுறவுச் சங்கத்திற்கு தங்களிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது போன்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜெயராமன், வேளாண்மை துறை இணை இயக்குநர் பூ.வசந்தா, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சு.சாந்தி உள்ளிட்ட கூட்டுறவு மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision