பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியருக்கு SERB பெல்லோஷிப் விருது
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பட்னாகர் விருது பெற்ற டாக்டர் லட்சுமணன் நேஷனல் சயின்ஸ் சேர் (National Science Chair) Science &technology and Engineering Research Board (SERB)பெல்லோஷிப்பிற்கு தேர்வு செய்து பெருமைப்படுத்தியுள்ளது.
பட்னாகர் விருது குறித்தும் பெல்லோஷிப் குறித்தும் அவரிடம் பேச சென்றபோது தன்னுடைய வாழ்க்கை பயணம் பற்றியும் பகிர்ந்துள்ளார் டாக்டர் லட்சுமணன்....
பொள்ளாச்சியில் கடைக்கோடியில் உள்ள கிராமம் ஒன்றில் தமிழ் வழியில் என்னுடைய பள்ளி படிப்பை தொடங்கினேன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் Pre university முடித்து என்னுடைய இளங்கலை படிப்பை NGM பொள்ளாச்சி கல்லூரி, சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் என்னுடைய முதுகலைப் பட்டமும் பெற்றேன்.சிறு வயது முதலே கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஆர்வம் இருந்ததால் என்னுடைய முனைவர் பட்டத்திற்கு சென்றபோது மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் கொள்கை சார்ந்த இயற்பியல்(Theoretical physics) பற்றிய என்னுடைய ஆய்வினை தொடங்கினேன்.1974இல் என்னுடைய முனைவர் பட்டத்தினை முடித்து அமெரிக்கா,ஜெர்மன்,ஹாலந்து போன்ற நாடுகளுக்குசென்று ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருந்தேன்.
அப்போது திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் reader in physics இணைப் பேராசிரியர்க்கு நிகரான பணிக்கு அழைத்தபோது, அழைப்பையேற்று 1978 இல் (இது மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் பி.ஜி விரிவாக்க மையமாக இருந்தபோது) பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றத் தொடங்கினேன். 1992லிருந்து 2006 வரை இயற்பியல் துறை தலைவராகவும்,பேராசிரியராகவும் பணியாற்றினேன். பின்னர் சிறப்புமிகு பேராசிரியராகவும்(Proffers of eminence ) ஆராய்ச்சியாளர்க்கு வழிகாட்டியாகவும் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறேன் .
45 வயதிற்கு உட்பட்ட சிறந்த விஞ்ஞானிகளுக்கு கணிதம் அறிவியல், பொறியியல்,வேதியியல் மற்றும் இயற்பியல் துறை சார்ந்தவர்களுக்கு அவர்களது பணியினை பாராட்டி வழங்கப்படும் மிக உயரிய விருது "பட்னாகர் விருது" 1989இல் இயற்பியல் துறையில் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியதற்காக பெற்றுக் கொண்டேன்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்னாகர் விருது பெற்ற முதல் விஞ்ஞானி என்பது என்னையும் என் குடும்பத்தையும் பெருமைப்படுத்தும் விதமாக அமைந்தது.
பல நாடுகளில் ஆராய்ச்சியின் போது பிரபலமாக என்னை தெரிந்தவர்கள் இருந்த நிலையில் இந்தியாவில் இவ்விருதிற்கு பின்னர் என் மீதான நம்பிக்கையும்,மதிப்பும் அதிகரிக்க செய்தது.
பட்நாகர் விருது என்பது ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல் கணிதம் மற்றும் அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளுக்கு இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் வழங்கும் மிக உயரிய விருதாகும்.விருதுதோடு ரூபாய் 5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் .
தற்போது கிடைத்துள்ள நேஷனல் சயின்ஸ் சேர் பெல்லோஷிப்பானது மாதத்திற்கு 1.5 லட்சம் மற்றும் வருடத்திற்கு 25 லட்சம் ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்த பெல்லோஷப்பிற்கு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் ஐந்து நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் மாணவர்கள் தங்களது இருப்பிடத்திலேயே பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் மாணவர்கள் தங்களை ஊக்கப்படுத்திக் கொள்ளவும் தங்களுடைய பாதையில் சிறந்து விளங்குவதற்கு தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கேள்விகளை முன்னெடுக்கும் பொழுதுதான் அதற்கான பதில்களிலிருந்து ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் தொடருகின்றன. எனவே மாணவர்கள் ஆக்கபூர்வமான முறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்தியாவை அறிவியல்துறையில் சிறந்த நாடாக முன்னேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF