இறந்தவரை புதைப்பதில் திடீர் பிரச்சினை - ஆர் டி ஓ பேச்சுவார்த்தை

இறந்தவரை புதைப்பதில் திடீர் பிரச்சினை - ஆர் டி ஓ பேச்சுவார்த்தை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கிருஸ்ணசமுத்திரம் ஊராட்சி எழில் நகர் பகுதியில் இறந்தவரை புதைப்பதில் ஏற்பட்ட திடீர் பிரச்சினையால் ஆர் டி ஓ தலையிட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தார்.

திருவெறும்பூர் அருகே உள்ளது கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி இங்கு உள்ள கீழ குமரேசபுரம் பகுதியில் வசிக்கும் சில சமுதாயத்தினர் எழில் நகர் பகுதியில் உய்ய கொண்டான் ஆற்றங்கரையில் பல ஆண்டுகளாக புதைத்து வருகின்றனர்.

தற்பொழுது அந்தப் பகுதியில் வீடுகள் அமைந்துள்ளதால் அங்கு வசிக்கும் சிலர் அதற்கு ஆட்சேபனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கீழ குமரேசபுரம் பகுதியில் பெல் நிறுவன ஓய்வு ஊழியர் நல்லுச்சாமி (75) நேற்று இறந்துவிட்டார். அவரது உடலை இன்று புதைப்பதற்கு அப்பகுதி மக்கள் தயாராகி வந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த அப்பகுதி குடியிருப்பு நல சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர். அப்பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி (45 ) என்பவர் கடும் ஆட்சேபனை தெரிவித்ததுடன் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரடையும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இது பற்றி தாசில்தார் ஜெயபிரகாசம், ஆர்டிஓ தவசெல்வத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டாட்சியர் இருதரப்பினரடையும் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தார்.

தற்பொழுது இறந்துள்ள நல்லுசாமியின் பிரேத உடலை அதே இடத்தில் புதைத்துக் கொள்வது என்றும் வருகின்ற புதன்கிழமை திருவெறும்பூர் தாசில்தார் அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நிரந்தர தீர்வு செய்யப்படும் என்று அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில் அப்பகுதி மக்கள் சமாதானமாகி கலைந்து சென்றனர். அப்பகுதியில் மேலும் பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதற்காக திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn