திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் தற்கொலை முயற்சி - பரபரப்பு

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் தற்கொலை முயற்சி - பரபரப்பு

திருச்சி மாநகராட்சி அவசர மற்றும் சாதாரண கூட்டம் இன்று தொடங்கியது. இதில் மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 60வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய் பேசுகையில்....., கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது வார்டில் எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து நான் பலமுறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டும் செவி சாய்க்கப்படவில்லை.

இதனால் எனது வார்டு மக்களுக்கு பதில் கூற முடியாமல் தவிக்கிறேன். ஆகையால் 25 ஆண்டு காலமாக மாமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்றிய கொடுத்த மக்களுக்கும், அமைச்சர் நேருவுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டு நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கண்ணீர் மல்க பேசினார். இதைத்தொடர்ந்து மேயர் மற்றும் ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுக உள்ளிட்ட பல கட்சி மாமன்ற உறுப்பினர்கள் முயற்சித்தனர்.

ஆனால் என்னை தடுத்தீர்கள் என்றால் காரில் மண்ணெண்ணெய் வைத்திருக்கிறேன் இங்கேயே தீக்குளித்து விடுவேன் என்று ஆவேசமாக கூறினார். இதைத் தொடர்ந்து இதர கவுன்சிலர்களின் சமாதானத்தையும் ஏற்காத காஜாமலை விஜய் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளியேறினர். பின்னர் அவரது காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்ற காஜமலை விஜய் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து திடீரென பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சித்தார். அப்பொழுது அங்கு இருந்த காவல்துறையினரும், கட்சியினரும் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் மீண்டும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சக மாமன்ற உறுப்பினர்கள் அவரை சமாதானப்படுத்தி காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

திமுக உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள திருச்சி மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் தனது வார்டில் நடைபெறவில்லை என்று திமுக கவுன்சிலர் ஒருவரே ராஜினாமா செய்து, தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision