தெற்காசிய விளையாட்டுப் போட்டி தடகளத்தில் வெள்ளி பதக்கம் வென்ற திருச்சி இளைஞர்
திறமைக்கு வறுமை தடையில்லை என்பதை உலகறிய சாதித்துக் காட்டும் ஒவ்வொரு இளைஞனும் உலக இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாய் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த சாகுல்ஹமீது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு தடகளத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். வெற்றி குறித்து சாகுல் ஹமீதை தொடர்பு கொள்கையில் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டவை. சிறு வயதிலிருந்தே விளையாட்டின் மீது எனக்கு அதிக ஆர்வம் அதிகம். லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பு அரசு கலை அறிவியல் கல்லூரியில் என்னுடைய கல்வி பயணத்தை தொடர்ந்தேன்.
விளையாட்டில் ஒரு போதும் எனக்கு ஆர்வம் குறைந்தது இல்லை. என்னை திருச்சி தென்னக ரயில்வே ஆபீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் ராமச்சந்திரன் எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். என்னை ஊக்கப்படுத்துவதோடு எனக்கு பயிற்சியும் அளித்து வருகிறார். என் தந்தை நூர்ஜான், தந்தை இருந்தவரை ஏழ்மை இருந்தாலும் என்னுடைய விளையாட்டு பயணத்திற்கு ஒருபோதும் தடை கோரியது கிடையாது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி அன்று என் தந்தை உடல்நலக் குறைவால் இறந்தார். அத்தருணத்தில் என் குடும்ப பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டபோதும் எனக்கு விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தால் என் தாய் சமீம் என்னை எப்படியும் விளையாட்டு துறையில் வெற்றிப் பெறசெய்திட வேண்டுமென்று உறுதுணையாக என்னோடு இருந்து வருகிறார்.
கோவாவில் நடைபெற்ற இந்திய கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடந்த பிரைசன் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொண்டு நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி பூட்டானில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று வெள்ளி பதக்கத்தை வென்றேன். கடந்த ஆண்டு இதே நாளில் என் தந்தை என்னை விட்டு பிரிந்த அதே நாளில் இந்த ஆண்டு அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரை பெருமைப்படுத்தும் விதமாக நாட்டிற்காக வெள்ளிப் பதக்கம் வென்றேன் என்பது என் வாழ்நாள் சாதனையாக கருதி என் வாழ்நாளில் மிகவும் மறக்க முடியாத தருணம் ஆகும் தினமாகவும் இந்நாள் அமைந்துள்ளது.
அவரின் அன்பு எப்போதும் எனக்கு துணை நிற்கும் என்பதை இந்த வெற்றி எனக்கு உணர்த்தியது. வறுமையால் என்னுடைய திறமை உலகுக்கு தெரியாமலே போய்விடும் என்று பயந்து கொண்டிருந்த சூழ்நிலையில் என் அம்மா அளித்த ஊக்கத்திற்கும் என் மீதான அவரின் நம்பிக்கைக்கும் என்னுடைய ஒவ்வொரு சாதனையையும் அவருக்கு உரித்தாக்கிக் கொள்கிறேன்.
லால்குடி பள்ளிவாசல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் என் தாய்க்காக சொந்த வீடு கட்டி தரவேண்டும் என்பது என் ஆசை. வருங்காலகட்டத்தில் உலக கோப்பை போட்டி மற்றும் உலக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்று என் தாய்க்கும் என் தாய் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்பதே என் ஒற்றை கனவு என்கிறார் சாகுல் ஹமீது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn