எச்சரிக்கை அவசியம் - எங்கும் சளி, இருமல், காய்ச்சல் நோய்கள்

எச்சரிக்கை அவசியம் - எங்கும் சளி, இருமல், காய்ச்சல் நோய்கள்

திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர்.சா.காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்....... மழைக்காலம் தொடங்கி விட்டது, மழையும், பனியும் இருந்தும் இல்லாமலும் இருக்கிறது. அனைவரும் கொண்டாடும் தீபாவளியும் வந்துட்டு போயிடுச்சு, அதே நேரத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் சளி, இருமல் சுரங்களும் வரத் தொடங்கிவிட்டது.

நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலமிது! மழைநீர் தேங்கி நிற்பதால் டெங்கு கொசு அதிகரிக்க வாய்ப்பு உண்டாகி டெங்கு வைரஸ் காய்ச்சலை பரப்பும். மேலும் தண்ணீர் சுத்தமில்லாமல் இருந்தால் அதன் வழியாக டைபாய்டு, மஞ்சள் காமாலை, சிறுநீரக தொற்று, உணவு ஒவ்வாமையாலும் காய்ச்சல் ஏற்பட வழிவகுக்கும்.

ப்ளூ என்று சொல்லக் கூடிய வைரஸ் காய்ச்சல் தான் அதிகம் வரும். குறைந்தது 3 முதல் 5 நாட்கள் சளி இருமல் தொண்டை கரகரப்பு காய்ச்சல் இருந்து விட்டுதான் போகும். குறிப்பாக குழந்தைகள், உடல் பலகீனமான நிலையில் இருப்பவர்கள், நாள்பட்ட நோய்களுக்கு மருந்தை உட்கொண்டு வாழ்பவர்கள் என அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

லேசான இருமல் தொண்டை கரகரப்பு தும்மலில் ஆரம்பித்து பின்னர் காய்ச்சல் அதிகரிக்கும். சுரம் வந்தால் உடனே மருந்து கடைகளுக்கு சென்று காய்ச்சலுக்கு ஒரு செட் மாத்திரை கொடுங்க என்று கேட்டு வாங்கி பயன்படுத்த கூடாது. எதனால் திடீரென்று காய்ச்சல் வந்தது? என்ன வகை காய்ச்சல்? என்று தெரிந்து அதற்கேற்ப மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி இல்லாமல் சுயமாக மருந்தை வாங்கி ஓரிரு நாட்கள் சாப்பிட்டு பின் காய்ச்சல் குறையாத போது நோய் தீவிர நிலையில் மருத்துவ மனைக்கு செல்லும் போதுதான் நோய் தீர்க்கமுடியாமல் உயிரிழப்பு கூட ஏற்படக்கூடிய நிலை உருவாகிறது. எனவே இதைத் தவிர்க்க விரைவான மருத்துவ உதவி, விரைவான மருத்துவ பரிசோதனை மூலம்தான் நோயைத் தீர்க்க உதவும் என்பதை நினைவில் கொண்டு மாறுபட்ட குறிகுணங்கள், அறிகுறிகள் தோன்றிய உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

காய்ச்சல்களுக்கு சித்த மருத்துவம் இருக்கா? காய்ச்சல் உடனே சரியாகுமா? சித்த மருத்துவத்தில் காய்ச்சலுக்கு மருந்து இருக்கா? குணப்படுத்த முடியுமா என்றுதானே எல்லோரும் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்?! நிச்சயமாக இருக்கிறது மருந்து! காய்ச்சல் முதல் 4448 நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் சிகிச்சைகள் கூறப்பட்டுள்ளன. சித்த மருந்துகள் தாமதமாகத்தான் வேலை செய்யும் என்று நினைக்கவேண்டாம். பிறர் சொல்வதையும் நம்ப வேண்டாம். உடனடியாக தீர்வு தரும், காய்ச்சலை குணப்படுத்தும் சித்த மருந்துகள் இருக்கின்றன. சித்த மருத்துவ நூல்களில் 64 வகையான சுரங்கள் இருப்பதை விளக்கி கூறப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் வரும் சுரங்களை பற்றியும் அதற்கான சித்த மருத்துவ தீர்வுகள் மற்றும் தற்காப்பு முறைகளைப் பற்றியும் பார்ப்போம் தெரிந்து கொள்வோம்.

மழைக்காலத்தில் சுரங்கள் வரக் காரணங்கள் :

மழைக்காலத்தில் சுரங்கள் ஏற்படுவதற்கு 

1) சுகாதாரமற்ற குடிநீர் குடிப்பது மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை உண்பது.

2) காற்றின் மூலம் பரவும் வைரஸ் நுண்கிருமிகள் மூலம்

3) மழைக் காலங்களில் அதிக அளவில் உற்பத்தியாகும் கொசுக்கள் போன்ற இவைகளால் காய்ச்சல் வரலாம்.

4) பிற தொற்றுக்கள் மூலமாகவும் காய்ச்சல் வரலாம்.

மழைக்காலங்களில் ஏற்படும் சுரங்கள் : மலேரியா காய்ச்சல் வரும் வழி :-

மலேரியா காய்ச்சல் பெண் அனாஃபிலிஸ் (Anopheles) என்ற கொசுக்களால் ஏற்படுகிறது. இவ்வகை கொசுக்கள் தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்தில் உற்பத்தியாகும்

அறிகுறிகள் : காய்ச்சல், நடுக்கம், தசை வலி, சோர்வு ஆகியன மலேரியாவின் அறிகுறிகளாகும்.

டெங்கு காய்ச்சல் வரும் வழி :- டெங்கு எடிஸ் (Aedes) வகை பெண் கொசுக்களால் ஏற்படுகிறது. பகலில் தான் இக்கொசுக்கள் கடிக்கும். இதன் மூலமே காய்ச்சல் வரும்.

அறிகுறிகள் : உடல் வலி, தலைவலி, வாந்தி, மூட்டு வலி, தடிப்புகள் போன்றவை உண்டாகும்.

இரத்த தட்டணுக்கள் குறைதல், இரத்த பிளாஸ்மா கசிதல், இரத்த அழுத்தம் குறைதல் ஆகிய குறிகுணங்கள் அபாயகரமானதாகும். எனவே எச்சரிக்கை தேவை.

சிக்குன்குனியா காய்ச்சல் வரும் வழி : ஏடிஸ் (Aedes)கொசுக்கள் கடிப்பதால் வருவது சிக்குன்குனியா

அறிகுறிகள் : காய்ச்சலோடு சேர்ந்து கடுமையான மூட்டு வலி இருக்கும். தலைவலி மற்றும் தூக்கமின்மை காணப்படும். நடக்கவே முடியாத நிலையை உண்டாக்கும். 

டைபாய்டு காய்ச்சல் வரும் வழி :- டைபாய்டு சுரம் வர காரணமாக இருப்பது (சால்மோனெல்லா டைபி) எஸ்.டைஃபி என்ற பாக்டீரியா. அசுத்தமான உணவு மற்றும் அசுத்தமான தண்ணீரை உபயோகிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற உணவு வாழ்க்கை முறை சீர்கேட்டினாலும் வரலாம்.

அறிகுறிகள் :- காய்ச்சல், தலைவலி, சோர்வு, குடல் மற்றும் தொண்டைப்புண் ஆகியன.

காலரா சுரம் வரும் வழி : விப்ரியோ காலரே (Vibrio cholera) என்ற பாக்டீரியாவால் ஏற்படுகின்றது

அறிகுறிகள் : - காலரா இருந்தால், கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும். 

மஞ்சள் காமாலை சுரம் வரும் வழி :- மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் ஹெப்படைடிஸ் வகை கிருமி, சுத்தமில்லாத உணவுகள் மற்றும் தண்ணீரின் மூலம் வருகிறது. 

அறிகுறிகள் :- உடற்சோர்வு, பசியின்மை, மஞ்சள் நிற சிறுநீர், வாந்தி மற்றும் ஈரல் செயல் பிறழ்ச்சி கண்கள் மஞ்சளாக இருத்தல் ஆகியனவாகும். 

சிறுநீர் தொற்றினால் ஏற்படும் காய்ச்சல் : சுத்தமில்லாத தண்ணீர் மூலமாக தொற்று ஏற்பட்டு காய்ச்சல் ஏற்படும். அதனால்தான் எல்லா காலங்களிலும் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆறிய பிறகு இளஞ்சூடாக குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

ப்ளூ வைரஸ் காய்ச்சல் / சுரம் வரும் வழி :- பல்வேறு வகையான வைரஸ் கிருமிகளால் ஏற்படும். இதற்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருப்பதுதான் முக்கிய காரணம்.

அறிகுறிகள் : மிதமான முதல் அதிகமான காய்ச்சல் சளியும் இருமலும் சேர்ந்து இருக்கும். விட்டு விட்டு வரும். குறைந்தது 3 முதல் 5 நாட்கள் தொடர்ந்து இருக்கும்.  

சித்த மருத்துவம் : `குடல் தன்னில் சீதமில்லாது சுரம் வராது' என்ற வாக்கிற்கிணங்க, வயிறு, குடல் பாதிப்பு, தொடர் மலக்கட்டே சுரம் வர காரணமாக இருப்பதால் முதன்மையாக தன்னிலை திரிந்த முக்குற்றங்களை (வாதம், பித்தம், கபம்) சமன் செய்ய மருந்து வழங்க வேண்டும்.

முதலில் வயிற்றில் உள்ள அழுக்கை வெளியேற்ற மலமிளக்கி மருந்தை விழுங்கி, வயிற்றில் உள்ள அழுக்கை வெளியேற்றி பின் சுரத்திற்கு மருந்து வழங்க சுரம் குறைந்து விரைவில் குணமடைவர்.

மலமிளக்கி மருந்து : திரிபலா சூரணம் காலை 5 கிராம், மாலை 5 கிராம் வெந்நீரில் கலந்து கொடுக்க வேண்டும், அல்லது நிலவாகை சூரணம் மேற்கண்ட அளவுப்படி அல்லது பொன்னாவரை மாத்திரை அல்லது திரிபலா சூரணம் மாத்திரை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.

1) குடிநீர் வகைகள் :-

   * நிலவேம்பு குடிநீர்

   * கபசுர குடிநீர், 

   * வாதசுர குடிநீர் 

    *ஆடாதொடை குடிநீர் 

   * நொச்சி குடிநீர் ஆகியன மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்ளலாம் .

2) மாத்திரைகள் :-

பிரம்மானந்த பைரவ மாத்திரை, கருப்புவிஷ்ணு சக்கர மாத்திரை, சாந்த சந்திரோதயம் மாத்திரை, வசந்த குசுமாசுர மாத்திரை, பால சஞ்சீவி மாத்திரை, மஹா சுதர்சன மாத்திரை, நிலவேம்பு குடிநீர் சூரணம் மாத்திரை, கோரோசனை மாத்திரை போன்ற மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வாங்கி பயன் படுத்த வேண்டும்.

3) சூரணம் :-

திரிகடுகு சூரணம்

தாளிசாதி சூரணம்

மஹா சுதர்சன சூரணம் 

4) பற்பம் :-

பவள பற்பம், 

முத்து பற்பம்,

முத்து சிப்பி பற்பம், 

வெள்ளி பற்பம் ஆகியன

5) செந்தூரம் :-

லிங்க செந்தூரம்

பூரண சந்திரோதயம் 

6) கருப்பு வகைகள் :-

சிவனார் அமிர்தம், 

கௌரி சிந்தாமணி,

கஸ்தூரி கருப்பு போன்ற எண்ணற்ற மருந்துகள் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி வாங்கி நாள் அளவு, மருந்தின் அளவு போன்றவற்றை தெரிந்து பயன்படுத்த வேண்டும். சுயமாக வாங்கி மருந்து கடைக்காரரிடம் கேட்டு தயவு செய்து பயன்படுத்த வேண்டாம். 

மழைக்கால சுரங்களை தடுக்கும் வழிமுறைகள் :

குடிப்பதற்கு காய்ச்சிய நீரைத் தான் அனைவரும் பருக வேண்டும். உணவை சமைத்து சூடு ஆறும் முன்பே உண்ண வேண்டும். உணவில் அடிக்கடி தூதுவளை கீரை, சுக்கு, கண்டங்கத்தரி, கொள்ளு, பனங்கற்கண்டு, மஞ்சள் தூள், மிளகுத்தூள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவைகளால் சேர்ந்த ரசம் தினசரி எடுத்துக் கொள்ளலாம். சிற்றரத்தை, துளசி அதிமதுரம், திப்பிலி ஆகிய மூலிகைகள் சேர்ந்த பானங்களை ரசம் வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தெருவோரம் விற்கும் உணவுகளை திண்பண்டங்களை வாங்கி சாப்பிடக்கூடாது. குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. மழைநீர் வீட்டைச்சுற்றி தேங்காமல் கவனிக்க வேண்டும். தேங்கியிருந்தால் உடனடியாக அப்புறப் படுத்தவேண்டும்.

கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசுக்களை விரட்ட வேப்பிலை, துளசி, தும்பை நொச்சி இலைகளை புகைக்கலாம். வீட்டின் தண்ணீர் தொட்டியை அடிக்கடி கழுவ சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மொட்டை மாடியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி மழையில் நனையக் கூடாது. மழையில் நனைந்தால் ஈரத்தலையுடன் இருக்க கூடாது. குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது. குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட், கேக், கிரீம் பிஸ்கட்ஸ் இவைகளை சாப்பிடக்கூடாது. கண்டிப்பாக குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள்.

பிறந்தமேனியாக இருக்க கூடாது. ஸ்வெட்டர், பனியன் சட்டை போட்டுக் கொள்ளலாம். ஏழை மக்கள் கொசு விரட்டி சுருள்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்தினால் ஆஸ்த்துமா, மூக்கடைப்பு, தும்மல், மூச்சு திணறல், மூக்கில் நீர் வடிதல் போன்றவை ஏற்படும். கரன்ட்டில் போடுவதை வாங்கி பயன்படுத்தலாம். ஆனால் காற்றோட்டம் இருக்க வேண்டும். இதிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும். உணவுகளை சூடாக சாப்பிடவும். பழைய உணவுகள், ஆறிய உணவுகளை மழைக்காலம் பனிக்காலங்களில் தவிர்க்க வேண்டும்.

ப்ளூ வைரஸ் காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு குடிநீர் :

தினசரி நோய் தொற்று தடுப்பு மருந்தாக நிலவேம்பு குடிநீரை சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று பயன் படுத்துங்கள். மழைக்கால நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். தடுக்க உதவும். 

நிலவேம்பு குடிநீர் செய்முறை : 5 கிராம் சூரணம் எடுத்து 240 மிலி நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து 60 மிலியாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி காலை ஒரு வேளை மட்டும் ப்ளூ வைரஸ் காய்ச்சலை தடுக்க எடுத்துக் கொள்ளலாம்.

குடிநீர் அளவு : 3 வயதிற்கு மேல் 12 வயது வரை 15 முதல் 30 மிலி தரலாம். மற்ற வயதினர் 60 மிலி எடுத்துக் கொள்ளலாம். உடலில் யாருக்காவது மாறுபட்ட குறிகுணங்கள் அறிகுறிகள் தோன்றிய உடனே அருகில் இருக்கும் மருத்துவர் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

எனவே மழைக்காலங்களில் ஏற்படும் சுரங்கள் வராமலிருக்க மேற்கண்ட வழிமுறைகளும், சித்த மருத்துவமும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். எச்சரிக்கையுடன் இருப்போம்…. மழைக்காலத்தில் ஏற்படும் சுரங்களிலிருந்து தற்காத்துக் கொள்வோம்!

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision