சங்க காலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நீர்காகங்கள் - பறவைகள் அறிவோம்!!
பெரும்பாலும் வானத்தில் பறக்கும் பறவை கூட்டங்களையே பார்த்து கொண்டிருக்கும் நமக்கு, நீருக்குள் நுழைந்து, மிதந்து தன் உணவை எடுத்து கொண்டிருக்கும் பறவைகளை எப்போது பார்த்தாலும் வியப்பாகவே தெரியும். ஆனால் நம்மில் பலருக்கு அவற்றின் பெயர் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அப்படி நாம் பார்த்து வியந்த நீரில் இருக்கும் பறவையை பற்றி விளக்குகிறார்.
பறவைகளை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வரும் பாலா பாரதி..... நீர்நிலைகளில் கழுத்தளவு மூழ்கி, மிதந்து கொண்டிருக்கும் உடல் முழுவதும் கறுப்பாக இருக்கும் இந்த பறவையின் பெயர் நீர்க்காக்கை. இந்நீர்க்காகங்கள் சிலப்பதிகாரத்திலும், கம்பராமாயணத்திலும் நீர்க் காக்கைகள் என்று அழைக்கப்படுகின்றன. கம்பராமாயணத்தில் நீர்க் காக்கையினத்தில் காணப்படும் இருவகைகளும் கூறப்பட்டுள்ளன.
LITTLE CORMORANT என்றழைக்கப்படும் நீர்க்கருங்காக்கை சில இடங்களில் கடற்காக்கை என அழைக்கப்படுகின்றன. ‘நீர்க்காகம்’ என்றழைப்பதே சரியானது. இதுபோன்றே இருக்கும் மற்றொரு பறவை INDIAN SHAG கம்பராமாயணத்தில் ‘கரண்டம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பறவைகளும் உடல் முழுவதும் கருப்பு நிறமானவை. நீரில் மூழ்கி நீருக்கடியில் நீந்தி மீனைத் துரத்திப் பிடிக்கும்.
பின்னர் அலகில் மீனொடு எழும்பும். கம்பரும் அழகாக நீர்க்கருங்காக்கை முழுகி முளைக்கும் என்றும் ‘கரணடம் முழுகுவ, கவ்வு மீனொடு எழுவ’ என்றும் கூறியுள்ளார். அப்பரும் தேவாரத்தில் ‘கரண்ட மலி தடம்பொய்கை காழியர்கோன்’ என்று இந்த பறவையை பற்றி குறிப்பிட்டுள்ளார். கரண்டி போன்ற மூக்குள்ளதால் கரண்டம் என்ற பெயர் வந்திருக்கலாம்.
நீரில் மூழ்கி மீனுடன் வெளியே வரும் இந்த நீர்க்காக்கை அலகிலுள்ள மீனை அப்படியே நேரடியாக விழுங்காமல், மேலே தூக்கிப்போட்டு தலைப்பகுதி முதலில் உள்ளே போகுமாறு விழுங்குவதை பொறுமையாக கவனித்தால் தெரிந்து கொள்ளலாம். இதனை “ஒழுகு சாற்றகன் கூனையின் ஊழ்முறை முழுகி நீர்க்கருங் காக்கை முளைக்குமே” “எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்னக் கவ்வு மீனெடு முழுகுவ எழுவன கரண்டம்.” என்ற சங்கப்பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision