பள்ளி மாணவர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண் பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சடிக்க திட்டமிட்டுள்ளோம் - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
நவம்பர் 19 சர்வதேச குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி பணிமனையை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அனைத்து பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான சுவரொட்டிகளை அமைச்சர் வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி... திருச்சியில் ஆரமித்துள்ள இந்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை மற்ற மாவட்டங்களிலும் நடைபெறும்.
ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என தனித்தனியே பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. அனைத்து பள்ளிகளிலிலும் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்படும். பள்ளி மாணவர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண் 14417 வரும் காலங்களில் பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சடிக்க திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள் அளிக்கும் புகார்களின் உண்மை தன்மை ஆராய்ந்து அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ஏற்கனவே நிலுவையில் உள்ள புகார்கள் மீதும் விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் மாணவர்கள் புகார் அளித்தால் அது வெளியே தெரிந்தால் பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என்பதால் பள்ளிகளில் பிரச்சினைகளை விசாரிக்காமல் விட்டு விட கூடாது. அது போன்று பள்ளி நிர்வாகம் இருக்க கூடாது. கண்டிப்பாக மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கூட பள்ளி நிர்வாகம் குறைந்தபட்சம் அவர்களது பெற்றோர்களையாவது அழைத்து பேசி இருக்கலாம். பள்ளிகளில் பிரச்சினை ஏற்படும் போது பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்ய கூடாது. குழந்தைகள் மீது பாலியல் சீண்டல்கள் இருக்கும் பட்சத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் மிக கடுமையான நடவடிக்கைகள் இருக்கும். தனியார் பள்ளிகள் பெற்றார்களிடம் வற்புறுத்தி முழுப்பனத்தை வாங்குவதாக புகார்கள் வருகிறது. கொரோனா காலத்தில் அதிக பணம் கேட்டு பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்த கூடாது என நீதிமன்றமே கூறியுள்ளது. தனியார் பள்ளிகள் தங்களது சமூக பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட வேண்டும்.
அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2021-2022 ஆம் கல்வியாண்டில் 5 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளார்கள். ஏற்கனவே 66 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயின்று வந்த நிலையில் தற்போது ஏறத்தாழ 71 லட்சம் மாணவர்கள் இன்று அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது எல்லாருடைய முயற்சி மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டம் காரணமாக தான். இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் விவசாயிகளுக்கு ஆதராவக இருந்தார்கள் அதன் காரணமாக தான் தற்போது வெற்றி கிடைத்துள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வி துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn