திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியபுரம், கொப்பம்பட்டி, உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்து வந்தது. இந்நிலையில்
கொப்பம்பட்டி என்ற இடத்தில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் பயன்பாட்டில் இருந்த திறன் மின் மாற்றி மீது திடீரென இடி, மின்னல் தாக்கியது. இதில் திறன் மின்மாற்றி தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக உப்பிலியபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மின்மாற்றியில் பிடித்த தீ கட்டுக்கடங்காமல் மளமளவென எரிய தொடங்கியது. தீயின் வேகம் அதிகமானதால் துறையூர் தீயணைப்பு துறை வீரர்களும் வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மூன்று மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் கொப்பம்பட்டி நாகநல்லூர், தளுகை, மங்கப்பட்டி, முருங்கப்பட்டி, வைரிசெட்டிபாளையம் பச்சமலை கிராமங்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. பின்னர் காலையில் இப்பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC







Comments