திருச்சி உய்யக்கொண்டான் கால்வாயை தூய்மைப்படுத்தும் பணியில் நடிகை அனுஹாசன்!
திருச்சி மலைக்கோட்டை எப்படியோ அதே போலத்தான் 1000 ஆண்டு காலமாக பாரம்பரியமிக்க ராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்ட உய்யக்கொண்டான் கால்வாய் திருச்சிக்கு மேலும் பெருமை சேர்த்திடும் ஒன்று.
முப்போதும் விளைந்து வந்த இந்த கால்வாய் இப்போது மூக்கை மூடிக்கொண்டு கிடக்கும் அவல நிலையில், திருச்சியின் கூவம் போல மாறிவிட்டது நாம் அனைவரும் அறிந்ததே!
இந்த கால்வாயை காப்பதற்காகவும் மறு சீரமைத்து பராமரித்து பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திவரும் திருச்சி தன்னார்வலர்கள் குழுவான சிட்டிசன் ஃபார் உய்யக்கொண்டான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நூறு வாரங்களை கடந்து இரண்டரை வருடங்களாக 109 வது வாரத்தில் தன்னுடைய தூய்மை பணியினை மேற்கொண்டனர்.
இந்த 109 வது வார தூய்மைப் பணியில் நடிகை அனுஹாசன் கலந்துகொண்டார். அனுஹாசன் அவர்கள் உய்யக்கொண்டான் பற்றி கூறியதாவது" நம்முடைய கலாச்சாரங்களை பாதுகாப்பதை விட இதுபோல் கால்வாயை தூய்மைப்படுத்துவது என்பது மிகச்சிறந்த ஒன்று இதில் எத்தனையோ மக்களின் வாழ்வாதாரம் இதில் அடங்கி இருக்கிறது.இதற்கு திருச்சியின் தன்னார்வல இளைஞர்கள் கலந்துகொண்டது மிகவும் வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது. கால்வாயில் பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை போடக்கூடாது எனவும் இப்பணியினை சமூக வலைதளங்களில் என்னாலான உதவிகளையும் பொது மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்துவேன்" என்றார்.
மேலும் இவ்விழாவில் திருச்சி நகர பொருளாளர் அமுதவல்லி, தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.